

வடவள்ளி,
கோவை பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்பில் கலை முதல் அறிவியல் வரை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தமிழ்த்துறை தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் தங்கமணி வரவேற்றார். பல்கலைக்கழக கல்வியியல் துறை மற்றும் கல்வி நுட்பவியல் துறை தலைவர் கோ.சிங்காரவேலு பேசும்போது கூறியதாவது:-
கற்பித்தலில் 150 நுட்பங்கள் உள்ளன. அதில் குறிப்பிட்ட 10 நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்தினாலே போதும். இந்த நவீன காலத்திலும் பல்வேறு கல்லூரி, பள்ளிகளில் கணினி முழுமையாக மாணவ- மாணவிகளின் பயன்பாட்டிற்கு வரவில்லை. அது போல் கற்றலுக்காக கணினியை பயன்படுத்துவோர் குறைவாகவே உள்ளனர்.
செல்போனில் அதிக நேரம் செலவிடுவதை மாணவ- மாணவிகள் தவிர்க்க வேண்டும். பாடம் கற்பிக்கும் ஆசிரியர், பாடத்தை மட்டுமே நடத்தாமல் அது தொடர்பான வாழ்வியல் கருத்துகளையும் கூறவேண்டும். கேள்விகளின் மூலம் பாடம் கற்பிப்பது ஒருவகையான சிறந்த வழிமுறை. அதை பின்பற்றும் போது மாணவர்கள் விழிப்புடன் பாடங்களை கவனிக்க வாய்ப்பு உள்ளது. தந்திரம், வழிமுறை, நுட்பம் என்ற 3 வழிமுறைகளை கற்பிப்போர் கடைபிடிக்க வேண்டும்.
மாணவ- மாணவிகளில் கற்கும் திறன் சிறப்பாக உடையவரை தேர்வு செய்து, அவர்கள் மூலமாக சக மாணவர்களுக்கு விளக்க செய்யலாம். இன்றைய உலகில் சுயமாக கற்றல் பெருகி வருகிறது. அயல்நாடுகளில் பிளென்டர் எனப்படும் முறையை கற்பித்தலில் கையாளுகின்றனர். இது பழைய மற்றும் புதிய கற்பித்தல் முறையை ஒருங்கிணைத்து நடத்தும் முறையாகும்.
உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகள் தற்போது இணையவழி கற்றலை அதிகம் மேற்கொள்கின்றனர். எனவே கற்றலுக்கான தரவுகளை இணையத்தில் அதிகம் பதிவேற்றம் செய்யலாம். ஒவ்வொரு பாடத்தையும் காட்சிப்படங்களாக மாற்றி கற்பிப்பது மாணவ- மாணவிகளிடம் நல்ல வரவேற்பை பெறும். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் உதவி பேராசிரியர் இளையராஜா நன்றி கூறினார்.