மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நாராயணசாமி வேண்டுகோள்

தூய்மைப்பணிகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.
மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நாராயணசாமி வேண்டுகோள்
Published on

புதுச்சேரி,

நேரு யுவகேந்திரா மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் நெல்லித்தோப்பில் நேற்று தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் தூய்மை நகர கணக்கெடுப்பு சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு களவிளம்பர இயக்குனரக மண்டல இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். புதுவை உதவி இயக்குனர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

முகாமினை தொடங்கிவைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி பரிசுகளை வழங்கினார். மேலும் விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

தூய்மை இந்தியா திட்டம் நாட்டில் 30 வருடங்களாக இருந்து வருகிறது. பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஒவ்வொரு வீட்டிலும் கழிவறை கட்டுவதற்கான திட்டத்தை கொண்டுவந்தார். புதுவையில் கழிவறை கட்ட அரசு சார்பில் ரூ.20 ஆயிரம் கொடுத்து வருகிறோம். இதனால் மாகி, ஏனாம் பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. புதுவை, உழவர்கரை நகராட்சிகளில் 95 சதவீதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதிகளாக மாற்றியுள்ளோம்.

நம்மிடம் துப்புரவு தொழிலாளர்கள் இருந்தாலும் குப்பை வாரும் பணியை தனியாருக்கு டெண்டர் விட்டுள்ளோம். தூய்மைப்பணிகளால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் மட்டுமின்றி புதுவைக்கு சுற்றுலா வருபவர்களிடமும் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

புதுவையை ஸ்மார்ட் நகரமாக மாற்ற ரூ.1,850 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம், போக்குவரத்து, தரமான குடிநீர் தர உள்ளோம். கழிவுநீர் வாய்க்கால்களில் படகு விடும் திட்டமும் இதில் அடங்கும். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். விழாவில் பிப்டிக் தலைவர் சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புதுவையில் முன்பு நகராட்சி மூலம் ஒரு நாளைக்கு 2 முறை குப்பை வாரப்பட்டது. ஆனால் இப்போது தனியாருக்கு குப்பை வாரும் பணியை விட்டுள்ளோம். அவர்கள் சரிவர குப்பை வாருவதில்லை. அதிகாரிகளும் மேம்போக்காக செயல்படுகிறார்கள். நகர்ப்புறங்களில் பொதுக்கழிப்பிடங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. குப்பை அள்ளுபவர்கள் 2, 3 நாட்களுக்கு ஒருமுறை வருகிறார்கள். அதுவரை மீன், இறால் கழிவுகளை வீட்டிற்குள்ளேயே வைத்திருக்க முடியுமா? குப்பை அள்ளுபவர்களுக்கு சம்பளமும் வழங்கப்படுவதில்லை. கேட்டால் நிதிப்பற்றாக்குறை என்கிறார்கள்.

புதுவையை பொறுத்தவரை குப்பை வாரும் திட்டம், தூய்மை இந்தியா திட்டம் தோல்வியடைந்துவிட்டது. எனது தொகுதியில் மட்டும் 6 பொது கழிப்பிடங்கள் மூடப்பட்டுள்ளன. பஸ் நிலைய பகுதியை மூக்கை பிடித்துக்கொண்டு கடந்து செல்ல வேண்டியுள்ளது.

நிகழ்ச்சியில் புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், தூய்மை இந்திய திட்ட இயக்குனர் அகர்வால், புதுவை நகராட்சி ஆணையர் கணேசன், மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் ஹெலன்ராணி, தூர்தர்ஷன் நிகழ்ச்சி பிரிவு தலைவர் சுந்தர், வானொலி நிலைய உதவி இயக்குனர் செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் களவிளம்பர உதவியாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com