மாணவர்கள் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் தளவாய்சுந்தரம் பேச்சு

மாணவர்கள் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று நாகர்கோவிலில் நடந்த செய்குதம்பி பாவலர் பிறந்தநாள் விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேசினார்.
மாணவர்கள் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் தளவாய்சுந்தரம் பேச்சு
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் இலக்கியவாதியான சதாவதானி செய்குதம்பி பாவலரின் பிறந்தநாள் விழா தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 146-வது பிறந்தநாள் விழா நேற்று நாகர்கோவில் கோட்டார் குமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், சதாவதானி செய்குதம்பி பாவலரின் உருவப்படத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், சதாவதானி செய்குதம்பி பாவலர் அறக்கட்டளை நற்பணி மன்றம் சார்பில் சதாவதானி செய்குதம்பி பாவலர் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் பள்ளிக்கூட அளவில் முதல் இடம் பிடித்த மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வீதம் பரிசு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மணிமண்டபம் விரிவாக்கம்

146-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படும் செய்குதம்பி பாவலர், குமரி மண்ணிலே பிறந்து, வளர்ந்தவர். அவர் தமிழுக்காக தன்னையே தியாகம் செய்து, சுதந்திர போராட்ட தியாகியாக இருந்தவர். அவருடைய மணிமண்டபத்துக்கு 29-4-1984-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். அடிக்கல் நாட்டினார்.

1987-ம் ஆண்டு முன்னாள் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் மண்டபத்தை திறந்து வைத்தார். அவரது நினைவாக குமரியில் உள்ள இந்த மணிமண்டப விரிவாக்கத்துக்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். தமிழுக்காக தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த செய்குதம்பி பாவலரை போன்று, இன்றைய மாணவர்களும் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

இவ்வாறு தளவாய் சுந்தரம் பேசினார்.

முன்னதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் வரவேற்று பேசினார்.விழாவில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண்தங்கம், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் பிருந்தா, ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் கிருஷ்ணகுமார், சதாவதானி பாவலர் தமிழ்சங்கத் தலைவர் பாவலர் சித்திக், பொருளாளர் மலுக்கு முகமது, குமரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அதிகாரி செல்வலெட் சுஷ்மா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com