

கடலூர்,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. இதையடுத்து ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கடலூர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு 2-ம் பருவ செமஸ்டர் தேர்வும், முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு 2-ம் பருவ செமஸ்டர் தேர்வும் நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரி வகுப்பறையில் தேர்வு நடத்தப்படாது என்றும், ஆன்லைனில் வினாத்தாள் வழங்கப்பட்டு, வீட்டில் இருந்தபடியே மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்றும், விடைத்தாளை தபாலில் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் கல்லூரிக்கு அருகில் வசிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதி முடித்த ஒரு மணி நேரத்திற்குள் விடைத்தாளை நேரடியாக கல்லூரிக்கு கொண்டு வந்து வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மரத்தடியில் அமர்ந்து...
ஆனால் கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியதை மீறி பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக நேற்று காலை கல்லூரிக்கு திரண்டு வந்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்களை கல்லூரி வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தடியில் அமர்ந்து தேர்வு எழுதினர். மேலும் சிலர் கல்லூரியின் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்று கூட்டம் கூட்டமாக அமர்ந்தும் தேர்வு எழுதினர். இதையடுத்து தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாளை கல்லூரியில் ஒப்படைத்தனர். அப்போது அங்கிருந்த பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தின் அறிவிப்பை ஏற்று வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் தேர்வு எழுதுமாறு மாணவர்களிடம் அறிவுறுத்தினர்.