

கோவில்பட்டி,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அ.குமரெட்டியபுரம் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அந்த பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள், நேற்று கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள பயணிகள் விடுதி முன்பு சாலையோரத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த போராட்டத்தில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டு இருந்தன. அதனை பார்த்து கல்லூரி மாணவ-மாணவிகள், கோவில்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை 4 மணிக்கு போராட்டத்தை தொடங்கினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் தங்களது கைகளில், ஸ்டெர்லைட் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை வைத்து இருந்தனர். அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி எட்டயபுரத்தில் நேற்று இளசை நண்பர்கள் என்ற பெயரில் சமூகவலைதளம் மூலம் ஒருங்கிணைந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. எட்டயபுரம் பாரதி மண்டபம் முன்பு இருந்து பேரணியாக வந்து எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர். இதில் 80-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஜெகதீஷ் நன்றி கூறினார்.