

பெங்களூரு,
கர்நாடகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுக்கு 2 ஜோடி சீருடை, ஷூ ஆகியவை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், 2019-20-ம் ஆண்டில் பல்வேறு அரசு பள்ளிகளில் ஒரு ஜோடி சீருடை மட்டும் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் ஒரே ஒரு சீருடையை மட்டும் துவைத்து பள்ளிகளுக்கு போட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், கொப்பல் மாவட்டம் கின்னாலா கிராமத்தில் உள்ள குவெம்பு நூற்றாண்டு மாதிரி அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு பயிலும் மஞ்சுநாத் (வயது 8) என்ற மாணவன் தனது தந்தை தேவப்பா பசப்பா ஹரிஜான் உதவியுடன் கர்நாடக கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தான். மனுவில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஒரு ஜோடி சீருடை மட்டும் வழங்கப்பட்டு உள்ளது. அதை மட்டுமே துவைத்து, துவைத்து ஆண்டு முழுவதும் அணிந்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் இன்னொரு ஜோடி சீருடையை வழங்க மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பன போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன.
இந்த மனு நேற்று முன்தினம் கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஒகா, நீதிபதி முகமது நவாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அரசின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்து, பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.
மேலும் இன்னும் 2 மாதங்களில் அரசு பள்ளிகளில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் 2-வது ஜோடி சீருடை வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இதுதவிர மனு தாக்கல் செய்த மஞ்சுநாத்துக்கு 2 வாரத்துக்குள் 2-வது ஜோடி சீருடையை வழங்க வேண்டும். வழக்கு செலவையும் அரசு வழங்க வேண்டும். வழக்கு தொடர்ந்து, பிற மாணவ- மாணவிகளுக்கு உதவியதன் காரணமாக மஞ்சுநாத்துக்கு மாநில அரசு ஒரு ஜோடி ஷூ, 2 ஜோடி காலுறை ஆகியவற்றையும் வழங்க வேண்டும். இவை அனைத்தையும் இன்னும் 2 வாரத்துக்குள் மஞ்சுநாத்துக்கு கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் கர்நாடக அரசு புது ஒப்புதல் ஒன்றை வழங்கியது. அதன்படி மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களில் இருக்கும் அரசு பள்ளிகளில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 87,903 மாணவ-மாணவிகளுக்காக ஒரு ஜோடி பள்ளி சீருடைகள் இலவசமாக வழங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.