மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கி அசத்திய ஆசிரியர்கள்

பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அறுசுவை உணவு வழங்கி அசத்தினர்.
மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை உணவு வழங்கி அசத்திய ஆசிரியர்கள்
Published on

வையம்பட்டி,

தனியார் பள்ளி, கல்லூரிகளில் இறுதியாண்டு படிப்பை முடித்து விட்டு அடுத்த படிப்பையோ அல்லது வேலையையோ தேர்வு செய்யும் மாணவ-மாணவிகளுக்கு பிரிவு உபசார விழா நடைபெறும். இந்தவிழாவின் போது மாணவ-மாணவிகள் தங்களின் உணர்வுகளை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதோடு ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் ஏதேனும் ஒரு பரிசு பொருளை தந்து காலம் முழுவதும் நினைவில் கொள்ள வைப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அதன்படி வருகிற மார்ச் மாதம் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. இதையடுத்து திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஓந்தாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மாணவ, மாணவிகளுக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது. கிராம மக்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் அரசு தேர்வை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தும், தேர்வை எதிர்கொள்ளும் விதம் பற்றியும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பேசினர். இதைத் தொடர்ந்து தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. சாதனைபடைக்கும் மாணவ- மாணவிகளுக்கு தங்ககாசு, வெள்ளி காசு, ரொக்கபணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. விழாவில் மாணவ, மாணவிகள் சுமார் 400 பேருக்கும், கிராம மக்களுக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதனை ஆசிரிய, ஆசிரியைகள் பரிமாறினர். இதனால் மகிழ்ச்சி அடைந்த மாணவ, மாணவிகள் பின்னர் ஆசிரியர்களுக்கு உணவை பரிமாறினர். இதுமட்டுமன்றி இரண்டு காப்பகங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் உணவு வழங்கினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com