8 வழி பசுமை சாலைக்காக எல்லைக்கல் நடப்பட்ட இடங்களில் ‘ஹெலிகாம்’ கேமரா மூலம் ஆய்வு

8 வழி பசுமை சாலைக்காக எல்லைக்கல் நடப்பட்ட இடங்களில் ‘ஹெலிகாம்‘ கேமரா மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.
8 வழி பசுமை சாலைக்காக எல்லைக்கல் நடப்பட்ட இடங்களில் ‘ஹெலிகாம்’ கேமரா மூலம் ஆய்வு
Published on

அயோத்தியாப்பட்டணம்,

சேலம்- சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நிலம் அளவீடு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள அடிமணிப்புதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, நிலவாரப்பட்டி, பூலாவரி ஆகிய இடங்களில் எல்லைக்கல் நடப்பட்டது.

எல்லைக்கல் நடும் பணி கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 36.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக 248 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அதிகாரிகள் நில அளவீடு செய்து எல்லைக்கல் நட்ட போது, பல்வேறு இடங்களில் விவசாயிகள், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சில இடங்களில் பெண்கள் தரையில் உருண்டு, கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மேலும் எல்லைக்கல்லை பிடுங்கி வீசிய சம்பவமும் நடந்தது.

இந்த நிலையில் நேற்று மஞ்சவாடிகணவாயில் இருந்து அடிமலைப்புதூரில் நில எடுப்பு பிரிவு தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்களும், அயோத்தியாப்பட்டணம் ஏரிக்காடு பகுதியில் நில எடுப்பு பிரிவு தாசில்தார் பெலிக்ஸ் ராஜா தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்களும் நிலம் கணக்கீடு பணியை தொடங்கினர்.

ஏற்கனவே நடப்பட்ட எல்லைக்கற்களுக்கு இடையே உள்ள நிலங்களை அளவீடு செய்து கணக்கெடுக்கப்பட்டது. மேலும் தென்னை மரங்கள், வீடுகள், கோவில்கள், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றையும் கணக்கெடுத்துள்ளனர். பசுமை வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் உள்ள தென்னை, வாழை, மா, சப்போட்டா மரங்கள் போன்ற விவசாயத்துக்காக உள்ள மரங்களை வேளாண்மைத்துறை அதிகாரிகளும், தேக்கு, சவுக்கு மரங்களை வனத்துறை அதிகாரிகளும் கணக்கீடு செய்து வருகிறார்கள்.

இதனிடையே நேற்று எருமாபாளையம், உடையாப்பட்டி, குப்பனூர், ஆச்சாங்குட்டப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் 8 வழி பசுமை சாலைக்காக நில அளவீடு செய்து எல்லைக்கல் நட்ட இடங்களில் ஹெலிகாம் கேமரா (ஆளில்லா குட்டி விமானம்) மூலம் வீடியோ எடுக்கப்பட்டது. இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் ஹெலிகாம் கேமராவை ரிமோட் மூலம் இயக்கிய நபர்களிடம் விசாரித்தனர். அவர்கள் பசுமை வழிச்சாலைக்காக படம் பிடித்து ஆய்வு நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், நில அளவீடு செய்து எல்லைக்கல் நடப்பட்ட பகுதிகளை துல்லியமாக ஆய்வு செய்வதற்காக ஹெலிகாம் கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டது. இந்த பகுதிகளில் உள்ள தென்னை, பாக்கு, வாழை, மா மரங்களின் எண்ணிக்கை குறித்தும், விவசாய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ள இடங்கள், தரிசு நிலங்கள் குறித்தும் கணக்கிடப்படுகிறது. இந்த வீடியோ பதிவுகள் மற்றும் சாலை அமைப்பது தொடர்பாக படங்களுடன் கூடிய வரைபடம் போன்றவை சென்னை மற்றும் டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் உயர் அதிகாரிகள் இந்த பகுதியில் எவ்வளவு மரங்கள் உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்வார்கள் என்று கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com