

மதுரை,
மதுரை மாவட்டத்தில் நாட்டுக் கோழி வளர்ப்பின் மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் 5 பயனாளிகள் வீதம் மொத்தம் 65 பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். முதல் கட்டமாக 32 பயனாளிகளுக்கு இந்த திட்டம் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பயனாளிகள் தேர்வில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதில் 30 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும்.
இந்த பயனாளிகள் கோழி வளர்ப்பில் அனுபவம் வாய்ந்தவர்களாகவும் அல்லது ஆர்வம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆயிரம் நாட்டுக் கோழிகள் வளர்ப்பதற்கான 2 ஆயிரத்து 500 சதுர அடி இடவசதி மற்றும் கொட்டகை வசதி இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்படும்.
ஒவ்வொரு பயனாளியும் ஆயிரம் நாட்டுக்கோழிகள் வளர்த்து, அதன் மூலம் பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தில் 1,000 கோழிக் குஞ்சுகள் வாங்குவதற்கான செலவில் 50 சதவீத மானியம் ரூ.15 ஆயிரம், ஒரு மாதத்திற்கான தீவன செலவில் 50 சதவீத மானியம் ரூ.22 ஆயிரத்து 500 மற்றும் குஞ்சு பொறிப்பான் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் ரூ.37 ஆயிரத்து 500 என ஒவ்வொரு பயனாளிகளுக்கும் மொத்தம் ரூ.75 ஆயிரம் மானியமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாய தொழில் முனைவோர்கள் தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி மேலும் விவரங்களை பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.