பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம் - கலெக்டர் சாந்தா தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.45 லட்சம் மானியம் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மாவட்ட கலெக்டர் சாந்தா கூறினார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம் - கலெக்டர் சாந்தா தகவல்
Published on

பெரம்பலூர்,

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசின் சிறு- குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க உற்பத்தி பிரிவில் ரூ.10 லட்சம் வரையிலும், சேவைப்பிரிவில் ரூ.3 லட்சம் வரையிலும், வியாபாரங்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான திட்டங்களில் மானியத்துடன் கூடிய கடனுதவிக்கு விண்ணப்பங்கள் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தமிழக அரசின் அரசாணையின்படி சிறு- குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு உச்ச வரம்பு முறையே ரூ.ஒரு லட்சம் மற்றும் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நல்ல மூலதனத்துடன் கூடிய தொழில் தொடங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வங்கிகடன் பெறும் பயனாளிக்கு திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை தமிழக அரசு வழங்கும். தகுதியான தொழில்களாக நேரடியான விவசாயம் தவிர பொருளாதார அடிப்படையில் லாபகரமான தொழில்கள் தொடங்கலாம். இதில் திட்ட இலக்கீடாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2019-20 ம் நிதியாண்டில் 70 நபர்கள் பயன்பெற ரூ.45 லட்சம் மானியம் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் படித்த வேலை தேடும் இளைஞர்கள் தொழில் தொடங்கிட www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரிலோ அல்லது 04328-224595, 225580 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com