

வேலூர்,
வேலூர்-ஆரணி சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வேலப்பாடியில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே ஆரணி ரோட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரெனப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. அப்போது அதில் மண்ணைக்கொட்டி தற்காலிகமாக மூடப்பட்டது. அதற்கு நிரந்தரமான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வாகனங்கள் செல்ல செல்ல பள்ளம் ஏற்பட்ட இடத்தில் சாலை மீண்டும் உள்வாங்கி வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை அதே இடத்தில் மீண்டும் திடீரெனப் பெரிய பள்ளம் ஏற்பட்டது. சுமார் 5 அடி ஆழத்துக்கு, 3 அடி அகலத்துக்கு பள்ளம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பள்ளத்தை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
இதையடுத்து அந்தப் பள்ளத்தை சுற்றிலும் கற்களை கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும் பள்ளத்தைச் சுற்றி கயிறுகட்டி வைக்கப்பட்டது. இந்தப் பள்ளத்தை மூட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.