கல்லட்டி மலைப்பாதையில் ஓடும் காரில் திடீர் தீ

கல்லட்டி மலைப்பாதையில் ஓடும் காரில் திடீர் தீ ஏற்பட்டது. இதில் டாக்டர் உள்பட 3 பேர் உயிர் தப்பினர்.
கல்லட்டி மலைப்பாதையில் ஓடும் காரில் திடீர் தீ
Published on

ஊட்டி,

கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருந்து நேற்று டாக்டர் ஒருவர் தனது மகள் உள்பட 2 பேருடன், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காரில் வந்தார்.

அவர்கள் மசினகுடியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டியை நோக்கி 12-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்தபோது, திடீரென காரின் என்ஜினில் தீப்பிடித்தது. உடனே காரை நிறுத்திவிட்டு டாக்டர் உள்பட 3 பேரும் வெளியே வந்தனர்.

தீ மள, மளவென எரிந்ததால் அப்பகுதி புகைமண்டலமானது. இதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்து, உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று என்ஜினில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர். டாக்டர் உள்பட 3 பேரும் உடனடியாக காரில் இருந்து இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தீயணைப்பு வீரர்கள் கூறும்போது, அபாயகரமான கல்லட்டி மலைப்பாதையில் புதிதாக வருபவர்கள் காரில் கிளட்ஜை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதனால் என்ஜின் அதிகமாக சூடாகி தீ விபத்து ஏற்படுகிறது. முதல் மற்றும் 2-வது கியரில் காரை இயக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து புதுமந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com