கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து திடீர் தண்ணீர் திறப்பு

கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து திடீரென்று தண்ணீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடியது.
கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து திடீர் தண்ணீர் திறப்பு
Published on

தொடர்மழை

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கர்வேட்டி நகரம் மண்டலம் அம்மபள்ளி என்ற இடத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. இந்த அணை உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆந்திர மாநில நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் இந்த அணையை திறந்து தண்ணீரை வெளியேற்றினர். இதனால் கிருஷ்ணாபுரம் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்தது. இதுகுறித்து தமிழக அதிகாரிகளுக்கு மிக தாமதமாக தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆற்றில் வெள்ளப்பெருக்கு

இருப்பினும் வருவாய்த்துறையினர் உடனடியாக செயல்பட்டு கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் தண்டோரா மூலம் ஆற்று தரை பாலங்களில் யாரும் இறங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு இரு கதவுகள் திறக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் உள்ள தரைப்பாலங்களின் இருபுறமும் வருவாய் துறையினரும், போலீசாரும் பொதுமக்கள் யாரும் இறங்காமல் கண்காணித்தனர்.

பிச்சாட்டூர் அணை

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணி அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, சிட்றபாக்கம் பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்க கடலில் கலக்கிறது. இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மாலை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி வீதம் அதிகரிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com