

தூத்துக்குடி:
தூத்துக்குடி பாத்திமாநகரில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு, கலவரத்தை தொடர்ந்து அரசாணை பிறப்பித்து மூடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆலையை திறக்கும் நடவடிக்கைகளில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. வாரம்தோறும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாத்திமாநகர் பகுதியில் சிலர் பொதுமக்களுக்கு அரிசி, மளிகைப்பொருட்களை கொடுப்பதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
தர்ணா போராட்டம்
அப்போது அங்கு திரண்டு வந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து சுமார் 300 பேர் அந்த பகுதியில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் அந்த பகுதி மக்கள் சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
இதற்கிடயே, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரபு, மகேஷ், சுஜித் உள்ளிட்டவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு நிரந்தரமாக மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏழை, எளிய மக்களுக்கு ஆதார் எண் கொடுத்தால் பணம் தருகிறோம், அரிசி, மளிகை பொருட்கள் தருகிறோம் என்பன போன்ற ஆசைவார்த்தை கூறி வருகிறது. தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தூண்டி விடுகிறது. இந்த ஆலையின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு காரணமானவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.