கன்னியாகுமரியில் புயல் நிவாரண பொருட்களுடன் ‘திடீர்’ போராட்டம்: இலவசமாக ரெயிலில் கொண்டு செல்ல அனுமதிக்கக்கோரி நடந்தது

கன்னியாகுமரியில் புயல் நிவாரண பொருட்களை இலவசமாக ரெயிலில் கொண்டு செல்ல அனுமதிக்கக்கோரி திடீர் போராட்டம் நடந்தது.
கன்னியாகுமரியில் புயல் நிவாரண பொருட்களுடன் ‘திடீர்’ போராட்டம்: இலவசமாக ரெயிலில் கொண்டு செல்ல அனுமதிக்கக்கோரி நடந்தது
Published on

கன்னியாகுமரி,

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனையொட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை ரெயிலில் இலவசமாக கொண்டு செல்லலாம் என்று ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், கந்தர்வகோட்டை பகுதிக்கு நிவாரண பொருட்களை கொண்டு செல்ல குமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு லெனினிஸ்ட் கட்சியினர் முடிவு செய்தனர்.

இதனையடுத்து அரிசி, தண்ணீர், பிஸ்கெட், உடைகள் என மொத்தம் 4 டன் பொருட்களுடன் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு இந்திய கம்யூனிஸ்டு லெனினிஸ்ட் கட்சியினர் சென்றனர்.

ஆனால் இந்த பொருட்களை ரெயிலில் இலவசமாக கொண்டு செல்ல அங்கிருந்த ரெயில்வே மேலாளர் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் டன் ஒன்றுக்கு ரூ.2,500 வீதம் 4 டன் பொருட்களுக்கு ரூ.10 ஆயிரம் கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை செலுத்திய பிறகு தான் புயல் நிவாரண பொருட்களை ரெயிலில் ஏற்ற அனுமதிப்போம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரெயில்வே அதிகாரியின் இந்த நடவடிக்கையை அவர்கள் கண்டித்தனர். அதே சமயத்தில் இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதில் முடிவு ஏற்படாமல் இருந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த இந்திய கம்யூனிஸ்டு லெனினிஸ்ட் கட்சியினர் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் நிவாரண பொருட்களுடன் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ரெயில்வே அதிகாரியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் தமிழக அரசு அதிகாரிகள், ரெயில்வே துறை அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து புயல் நிவாரண பொருட்களை இலவசமாக கொண்டு செல்ல ரெயில்வே அதிகாரி அனுமதித்தார். அதன்பிறகு மாலையில் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நிவாரண பொருட்கள் சென்றது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com