மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் தகராறில் பேராசிரியை கொலை செய்யப்பட்டது அம்பலம்

மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதல் தகராறில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் பேராசிரியையை கொலை செய்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
மர்மசாவு வழக்கில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் தகராறில் பேராசிரியை கொலை செய்யப்பட்டது அம்பலம்
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நகர் ஓரிக்கை அங்காள பரமேஸ்வரி கோவில் தெருவை சேர்ந்தவர் அனிதா (வயது 45). திருமணமாகாதவர். காஞ்சீபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 9-ந்தேதி தான் வசித்து வந்த வீட்டின் முதல் தளத்தில் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பிரேத பரிசோதனையில் அவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

கள்ளக்காதல்

விசாரணையில் காஞ்சீபுரம் அருகே நாயக்கன்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் சுதாகர் (42) என்பவரை போலீசார் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். போலீஸ் நிலையத்தில் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியப்பிரியாவும் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது,

உயிரிழந்த பேராசிரியை அனிதாவும், அரசு பள்ளி தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் சுதாகரும் காஞ்சீபுரத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றும் போது பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்னர் அனிதா தனியார் கலை கல்லூரியில் தமிழ் பேராசிரியையாக பணியாற்றினார். இருப்பினும் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது.

சுதாகருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ள நிலையில் அனிதா தவிர மற்றொரு தனியார் பள்ளி ஆசிரியையிடமும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

கைது

இது குறித்து அனிதா, சுதாகரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். மேலும் தன்னை திருமணம் செய்யவும் சுதாகரை அனிதா வற்புறுத்தியுள்ளதாக தெரிகிறது.

இதனால் மீண்டும் இருவருக்குள் தகராறு ஏற்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தல் அனிதாவின் தாடை மற்றும் மார்பகத்தில் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அனிதா சுதாகரிடம் தப்பிக்க தன்னுடைய அறைக்குள் சென்று உள் பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு தனது உறவினர்களை செல்போனில் அழைக்கும் போது மயங்கி இறந்து விட்டார். அதையடுத்து அங்கிருந்து சுதாகர் தப்பிச்சென்று விட்டார் என்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து சுதாகரே கொலை செய்திருப்பது உறுதியானதால் அவரை கைது செய்த போலீசார், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னர் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

சிறையில் அடைக்க உத்தரவு

நீதிபதி அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இது குறித்து காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் அருகே நாயக்கன்பேட்டையில் உள்ள அரசு பள்ளி தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் சுதாகருக்கும், அனிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளார். சுதாகர் தான் கொலை செய்தார் என்பதற்கான உறுதியான ஆதாரங்களும், சாட்சியங்களும் உள்ளதால் அவரை கைது செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com