அம்மாபேட்டை அருகே குவாரிக்கு வெடி வைத்தபோது திடீரென வெடித்தது; 2 தொழிலாளர்கள் பரிதாப சாவு

அம்மாபேட்டை அருகே குவாரிக்கு வெடி வைத்தபோது அது திடீரென வெடித்தது. இதில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தார்கள்.
அம்மாபேட்டை அருகே குவாரிக்கு வெடி வைத்தபோது திடீரென வெடித்தது; 2 தொழிலாளர்கள் பரிதாப சாவு
Published on

அம்மாபேட்டை,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் அந்தோணிபுரத்தில் ஒரு கல்குவாரி உள்ளது. அந்தியூர் கந்தம்பாளையத்தை சேர்ந்த பூபதி என்பவர் இந்தக் குவாரியை நடத்தி வருகிறார்.

சேலம் மாவட்டம் ஜேடர்பட்டி அருகே உள்ள ஆருளி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது 38), நெரிஞ்சிப்பேட்டை கரட்டுக்கொட்டாயை சேர்ந்த செந்தில் (40), கோவில்கரடு பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (35). ஆகியோர் இந்த குவாரியில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தார்கள்.

நேற்று குவாரியில் பாறையை உடைக்க வேண்டி இருந்தது. இதற்காக பாறைகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட துளைகள் போட்டு அதில் வெடிகளை ஆறுமுகமும், செந்திலும், சுப்பிரமணியும் பொருத்திக்கொண்டு இருந்தார்கள். செந்தில் கயிற்றை பிடித்து பாறை குழியில் இருந்து மேலே ஏறிக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரன அனைத்து வெடிகளும் வெடித்தன. இதனால் சிதறிய பாறைகள் செந்தில், ஆறுமுகம் மீது பயங்கர வேகத்தில் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்கள். சுப்பிரமணி உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும், பவானி கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல், அந்தியூர் தாசில்தார் மாலதி, வருவாய் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் விரைந்து சென்று பார்த்தார்கள். பின்னர் ஆறுமுகம், செந்தில் ஆகியோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெடி விபத்தில் பலியான சந்திலுக்கு பாப்பாத்தி (35) என்ற மனைவியும், பிரியதர்ஷினி, கோகுலதர்ஷினி, தர்ஷவர்ஷினி என்ற 3 மகள்களும் உள்ளனர்.

இதேபோல் ஆறுமுகத்துக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி துடித்தது பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com