

கோவை,
கோவை மாநகராட்சி பகுதியில் சூயஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் மூலம் 24 மணி நேர குடிநீர் வினியோக திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 24 மணிநேர குடிநீர் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தாலே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோவை மாநகராட்சி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூயஸ் நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் வினியோக திட்டம் குறித்து தமிழக நகராட்சி நிர்வாக ஆணையாளர் கோ.பிரகாஷ் மாநகராட்சி கூட்டரங்கில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்துக்கு அடுத்தபடியாக அதிக பட்ஜெட்டில் மத்தியமாநில அரசு களின் பங்களிப்புடன் அம்ருத் திட்டம் கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. கோவை மாநகராட்சியின் பழைய 72 வார்டுகளான தற்போதைய 60 வார்டுகளில் இந்த குடிநீர் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
அடுத்து அம்ருத் திட்டத்தில் கோவை விரிவாக்க பகுதிகளில் அதாவது மீதியுள்ள 40 வார்டுகளுக்கு இந்த திட்டம் விரிவாக்கப்படும். 24 மணி நேர குடிநீர் திட்டத்துக்கு மத்திய அரசு 33 சதவீதமும், மாநில அரசு 20 சதவீதமும், தனியார் 20 சதவீதமும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் ரூ.156 கோடி பங்களிப்பு செய்கிறது.
உலகம் முழுவதும் நகர்ப்புறங்களில் குடிநீர் வினியோகம் பெரிய சவாலாக உள்ளது. கோவையில் ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் கொடுக்கப்பட உள்ளது. குடிநீர் வினியோகத்தில் உள்ள இடைஞ்சல்களை தீர்க்கும் வகையில் இது நிறைவேற்றப்பட உள்ளது. அடுத்த ஆண்டு முதல் குழாய் பதிப்பு பணிகள் தொடங்கி விடும். கோவை மாநகராட்சியில் குடிநீர் வினியோக செலவுக்காக ஒரு ஆண்டுக்கு ரூ.75 கோடி செலவாகிறது.
சூயஸ் நிறுவனம் செயல்படுத்தினால் ரூ.52 கோடி தான் செலவாகும். இந்த தொகை ஆண்டுதோறும் அதிகரித்து 2043ம் ஆண்டு அந்த நிறுவனத்துக்கு ரூ.212 கோடி கொடுக்கப்படும். 26 ஆண்டு ஒப்பந்தப்படி 21 ஆண்டுக்கும் சேர்த்து ரூ.2,300 கோடி அந்த நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டியிருக்கும். இதையே மாநகராட்சி செயல்படுத்தினால் ரூ.4 ஆயிரம் கோடியாகும்.
தற்போது ஒரு பகுதிக்கு அதிக அழுத்தத்திலும், மற்றொரு பகுதிக்கு குறைந்த அழுத்தத்திலும் தண்ணீர் வருகிறது. ஆனால் சூயஸ் நிறுவனம் செயல்படுத்தினால் அனைத்து பகுதிக்கும் தண்ணீர் அழுத்தம் ஒரே மாதிரியாக இருக்கும். கோவை மாநகராட்சியில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதில் சில இணைப்புகளுக்கு சரியாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்றால் அதற்கு ஏற்றவாறு சூயஸ் நிறுவனத்துக்கு செலுத்தும் தொகை குறைக்கப்படும்.
இந்தியாவிலேயே ஒரு லட்சத்து 70 ஆயிரம் இணைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தனியார் நிறுவனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்வது இது தான் முதல் முறை. குடிநீர் இணைப்புக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை உள்பட எல்லாவிதமான அதிகாரமும் கோவை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு தான் உள்ளது. தனியாருக்கு கொடுக்கப்படவில்லை. இது தொடர்பான அனைத்து ஒப்பந்த ஆவணங்களும் இணையதளத்தில் உள்ளது.
ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் கொடுக்க வேண்டும் என்பது தான் மாநகராட்சியின் நோக்கம். எனவே பொது குடிநீர் குழாய்கள் படிப்படியாக குறைக்கப்படும். இந்த திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துக்கு அல்லாமல் தனியார் பங்களிப்புடன் 26 ஆண்டுகளுக்கு கொடுப்பது ஏனென்றால் தனியார் பங்களிப்புடன் திட்டத்தை நிறைவேற்றும் சூழல் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.
குடிநீர் கட்டணம் வீட்டின் பரப்பளவின் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படும். குறைந்த பட்சம் 300 சதுர அடி பரப்பளவு உள்ள வீட்டுக்கு ஒரு கட்டணமும், 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள வீட்டுக்கு ஒரு கட்டணமும் நிர்ணயம் செய்யப்படும். சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு குறைந்த கட்டணமும், அதிக வசதி உள்ளவர்களுக்கு அதற்கேற்ற கட்டணமும் வசூலிக்கப்படும்.
குடிநீரை பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கும், வீட்டின் பரப்பளவின் அடிப்படையிலும் குறைந்த கட்டணமும், அதிக வருவாய் உள்ளவர்களுக்கு அதற்கேற்ற கட்டணமும் வசூலிக்கப்படும்.
குடிநீர் இணைப்புக்கு ஏற்கனவே டெபாசிட் செலுத்தி இருந்தாலும், தற்போது கூடுதல் வசதிகள் செய்யப்பட உள்ளதால் கூடுதல் டெபாசிட் செலுத்த வேண்டியிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் கட்டணம் நிலையாக இருக்காது. ஆண்டுதோறும் குடிநீர் கட்டணம் 6 சதவீதம் உயரும்.
இந்த திட்டம் கவுன்சிலர்கள் பதவியில் இருந்த 2011ம் ஆண்டே தொடங்கப்பட்டது. அதன்பின்னர் டெண்டர் முடிவு போன்ற பணிகள் இருந்ததால் தான் தற்போது சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைக் கப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் வேலை குடிநீர் வினியோக பணி மட்டும் அல்ல. பாதாள சாக்கடை திட்டம், தெருவிளக்கு, சாலைபோன்ற பணிகளும் உள்ளன.
எனவே குடிநீர் வினியோக பணியை தனியாரிடம் ஒப்படைப்பதால் தரமான குடிநீர், சரியான நேரத்தில் வினியோகிக்கும் நிலை ஏற்படும். சொத்துவரி கடந்த 10 ஆண்டுகளாக திருத்தம் செய்யப்பட வில்லை. மற்ற மாநிலங்களில் சொத்தின் அரசு வழிகாட்டுதல் மதிப்பில் சொத்து வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஆனால் தமிழகத்தில் அப்படி வசூலிக்கப்படுவதில்லை. வாடகை வீடுகளுக்கு சொத்து வரி அதிகரிப் பதின் காரணம் அதன் உரிமையாளருக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது என்ற அடிப்படையில் தான் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.