

திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளது. இங்கு சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 7 மாதங்களாக திருவள்ளூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தெரு விளக்குகள் சரியாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
இந்த நிலையில் தெருவிளக்கை முறையாக பராமரிக்காததை கண்டித்து நேற்று திருவள்ளூர் நகராட்சி அலுவலகம் முன்பு திருவள்ளூர் முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் தாஸ் என்ற ராஜ்குமார், மகேந்திரன், ராமதாஸ், எம்.ஜி.ஆர்.சீனிவாசன், ஜெய்.சங்கர், மணி, செந்தில், பாலாஜி, தாமோதரன், ராகவன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் இதுதொடர்பான புகார் மனுவை திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.