ஏற்காட்டில் கோடை விழா: மலர் கண்காட்சி நாளை தொடக்கம் - கலெக்டர் ரோகிணி ஆய்வு

ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி, மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ரோகிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஏற்காட்டில் கோடை விழா: மலர் கண்காட்சி நாளை தொடக்கம் - கலெக்டர் ரோகிணி ஆய்வு
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்ற சிறப்பு பெயர் பெற்ற சுற்றுலா தளம் ஆகும். இங்கு லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா,, கிளியூர் நீர் வீழ்ச்சி, அண்ணா பூங்கா ஆகிய பொழுது போக்கு இடங்கள் உள்ளன. கண்ணுக்கு விருந்தளிக்கும், மனதுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் இந்த சுற்றுலா தளங்களை பார்த்து ரசிப்பதற்காக சேலம் மாவட்டம் மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் இருந்தும் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இயற்கை அழகை ரசித்து விட்டு செல்வார்கள்.

மேலும் இங்கு படகு இல்லம் உள்ளது. இந்த படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து படகு சவாரி செய்து மகிழ்வார்கள். ஏற்காட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின் போது கோடை விழா, மலர் கண்காட்சி ஆகியவை நடத்தப்படும். வழக்கமாக பள்ளிகள் திறப்பதற்கு பல நாட்களுக்கு முன்பே கோடை விழா நடத்தப்படும். ஆனால் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சற்று காலதாமதமாக இந்த ஆண்டு கோடை விழா நடத்தப்படுகிறது.

அதன்படி ஏற்காட்டில் 44-வது கோடை விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தொடர்ந்து ஜூன் மாதம் 2-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் ரோஜா, டேலியா, சால்வியா, மேரிகோல்டு, அஸ்டர், பெண்டஸ், கேலக்ஸ், ஜெனியா, கோழிக்கொண்டை உள்ளிட்ட 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் மூலம் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதே போன்று காய்கறி, பழக்கண்காட்சியும் நடக்க உள்ளது. கோடை விழாவில் அனைத்து அரசு துறைகள் மூலம் அந்தந்த துறையின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசு திட்டங்கள், சாதனை விளக்க கண்காட்சி நடத்த துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்ல பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி நடக்கிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம், ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவு போட்டி, மகளிர் திட்டம் மூலம் கோலப்போட்டி, சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டி, கலை, பண்பாட்டு துறை சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடக்க விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று காலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

அப்போது கோடை விழா மலர் கண்காட்சியை இந்த ஆண்டு சிறப்பாக நடத்த அனைத்து துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com