

திருவாரூர்,
திருவாரூர் தியாகராஜரின் தோழராகவும், 63 நாயன்மார்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார்-பரவைநாச்சியார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடி சுவாதி திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சுந்தரர்-பரவைநாச்சியார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை திருவாரூர் புதுத்தெருவில் உள்ள நாலுகால் மண்டபத்தில் இருந்து சுந்தரர் புறப்பட்டு தியாகராஜர் கோவிலை அடைந்தார். முன்னதாக தியாகராஜசுவாமி அலங்காரத்துடன் எழுந்தருளினார்.
பின்னர் பரவைநாச்சியார் கோவிலில் இருந்து பெண் அழைப்பு நடைபெற்றது. தொடர்ந்து சுந்தரர்-பரவைநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க அக்கினி குண்டம் வளர்க்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், பிரம்மரிஷி அன்னை ராஜகுமார் சுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நம்பி ஆரூரான் அமைப்பினர் செய்து இருந்தனர்.