மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா பாதுகாப்பு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். திருவிழாவையொட்டி 200 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழா பாதுகாப்பு குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
Published on

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா வருகிற 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வருவார்கள். எனவே திருவிழாவின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் நேரில் வந்து ஆய்வு செய்தார்.

கோவில் வளாகம், கடற்கரை, பொங்கலிடும் மண்டபம், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய இடங்களை பார்வையிட்டு, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் பி. சாஸ்திரி, இன்ஸ்பெக்டர் தங்கராஜ், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப் -இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், டைட்டஸ், இந்து சூடன், கோவில் ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன், தேவசம் கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

200 சிறப்பு பஸ்கள்

மண்டைக்காடு கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தும்படி போலீஸ் சூப்பிரண்டு கூறினார். இப்போதே கடற்கரையில் ஹைமாஸ் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும். கேரளாவிலிருந்து வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நடுவூர்க்கரை தற்காலிக பஸ் நிலையத்தில் நிறுத்தவும், வழிகாட்டி பலகைகள் அமைக்கவும் கூறினார்.

விழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (நெல்லை) மற்றும் கேரள அரசு போக்குவரத்துக் கழகமும் இணைந்து திருவனந்தபுரத்தில் இருந்து மண்டைக்காட்டுக்கு தலா 16 பஸ்களை இயக்க முடிவு செய்து இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த பஸ்கள் வருகிற 28-ந் தேதி முதல் மார்ச் 10-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

மேலும் நாகர்கோவில், கன்னியாகுமரி, களியக்காவிளை, மார்த்தாண்டம், குமாரகோவில், தக்கலை, குலசேகரம், திங்கள்நகர், குளச்சல் உள்பட மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து 200-க்கும் அதிகமான சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்து உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com