சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணி நிறுத்தம்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலியினால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணி நிறுத்தப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணி நிறுத்தம்
Published on

விழுப்புரம்,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27, 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று கடந்த 2-ந் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளிலும் 2 மாவட்டங்களை சேர்ந்த அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். மாவட்டம் பாகப்பிரிவினைக்கு முன்பாக எந்த முறையில் தேர்தல் நடந்ததோ அதே முறையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டனர்.

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்குவதாக இருந்தது. இதையொட்டி அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்.

இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகளை சரியாக முடிக்கவில்லை என்றும், குறிப்பாக புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை பணிகளை செய்யாததால் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதித்ததோடு மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் நிறுத்தப்பட்டது. வேட்பு மனுக்களை வாங்க தயார் நிலையில் இருந்த அதிகாரிகள் அந்த பணிகளை நிறுத்திவிட்டு தங்களது அலுவலக பணியில் ஈடுபட்டனர். அதுபோல் 2 மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் விலக்கி கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com