தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு: விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை - துணை முதல்மந்திரி பரமேஸ்வர் எச்சரிக்கை

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்துள்ளதை அடுத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு: விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை - துணை முதல்மந்திரி பரமேஸ்வர் எச்சரிக்கை
Published on

பெங்களூரு,

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு விதித்துள்ளதை அடுத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக அரசு சார்பில் நடைபெறும் திப்பு ஜெயந்தி விழாவை பா.ஜனதாவினர் தேவை இல்லாமல் எதிர்க்கிறார்கள். பா.ஜனதாவின் எதிர்ப்பை நாங்கள் பொருட்படுத்த மாட்டோம். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய திப்பு ஜெயந்தி விழாவை எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் நடத்துவோம்.

திப்பு ஜெயந்தி விழா அழைப்பிதழில் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பெயர் அச்சிடப்பட்டுள்ளது. பதவி அடிப்படையில் பெயர் போடப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்பதும் அல்லது வராமல் இருப்பதும் அவரது விருப்பம். எழுத்தாளர் சிதானந்தமூர்த்தி மீது மரியாதை உள்ளது. ஒவ்வொருவருக்கும் பேச்சு சுதந்திரம் உள்ளது. அதன்படி அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்

மாநில அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா நடத்துவது என்பது முன்பு எடுத்த முடிவு. அதன்படி மாநில அரசு இந்த விழாவை நடத்துகிறது. பா.ஜனதாவினர் திப்பு ஜெயந்தி விழாவை வைத்துக்கொண்டு, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள். இதற்கு அரசு அனுமதி வழங்காது. இந்த விழாவையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க போலீஸ் அதிகாரிகளுடன் நாளை(இன்று) ஆலோசனை நடத்த உள்ளேன்.

கர்நாடக ஆயுதப்படை உள்பட பல்வேறு பிரிவு போலீஸ் படை பிரிவுகளை பயன்படுத்திக் கொள்வோம். அடுத்த ஆண்டு(2019) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு, திப்பு ஜெயந்தி விழாவை பிரச்சினையாக்கி ஆதாயம் தேட பா.ஜனதாவினர் முயற்சி செய்கிறார்கள். இடைத்தேர்தலில் 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

எங்கள் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் பா.ஜனதாவுக்கு சென்று ராமநகர் தொகுதியில் போட்டியிட்டார். அவர் தனது தவறை உணர்ந்து, மீண்டும் காங்கிரசுக்கு வந்துள்ளார். அவருக்கு நாங்கள் பணம் எதுவும் கொடுக்கவில்லை. இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். வாரிய தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

நான் டெல்லிக்கு செல்லவில்லை. மந்திரி டி.கே.சிவக் குமார் எதற்காக டெல்லி சென்றுள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை. தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை மாநில அரசு அமல்படுத்தும். இது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com