கடந்த 40 நாட்களாக பூண்டி ஏரியில் இருந்து வெளியேறி வீணாக கடலில் கலக்கும் உபரி நீர்; சுமார் 2 டி.எம்.சி. தண்ணீர் வீணானதால் பொதுமக்கள் வேதனை

கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், பூண்டி ஏரியில் இருந்து 40 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் கலக்கிறது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
பூண்டி ஏரி
பூண்டி ஏரி
Published on

ஏரி நீர்மட்டம் உயர்வு

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி விளங்குகிறது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கடந்த செப்டம்பர் 21-ந்தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் பூண்டி ஏரி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது பலத்த மழை பெய்ததால் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் போதிய தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. இதனால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்தும், அங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு கூடுதலாக தண்ணீர் அனுப்ப முடியாத நிலை உள்ளது. பூண்டி ஏரியில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

உபரிநீர் வீணாகிறது

இதன் காரணமாக ஏரி இருப்பு முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, நவம்பர் 27-ந்தேதி முதல் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அதிகபட்சமாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இப்படி வீணாக தண்ணீர் கடலில் கலப்பது கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதையடுத்து கடந்த 40 நாட்களாக ஏரியில் இருந்து உபரிநீர் வீணாக வெளியேறி கடலில் கலக்கிறது. சுமார் 2 டி.எம்.சி. தண்ணீர் வீணாக வெளியேற்றப்பட்டு இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த தண்ணீரை வைத்து சென்னையில் 2 மாதங்களுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்து இருக்கலாம்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பூண்டி ஏரி முழுவதுமாக வறண்டு விட்டதால் சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை சமாளிக்க அரசு மூலம் வேலூர் மாவட்டத்திலிருந்து ரெயில்கள் மூலம் குடிநீர் கொண்டு வந்து சென்னை மக்களுக்கு வினியோகிக்கப்பட்டதை மக்கள் நினைவு கூறுகிறார்கள்.

பொதுமக்கள் வேண்டுகோள்

எனவே தொடர்ந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா தண்ணீரை தற்காலிகமாக நிறுத்தி விட்டு தேவைப்படும் போது திறந்து விட தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவெண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்..

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 34.96 அடியாக உள்ளது. 3,231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். 3,135 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 873 கனஅடியாக வந்து கொண்டிருந்தது. புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு வினாடிக்கு 360 கன அடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு 9 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக வினாடிக்கு 487 கனஅடி தண்ணீர் வீணாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com