பெண்ணை கடத்தி மிரட்டிய வழக்கில் கோர்ட்டில் சரண்: ரவுடி படப்பை குணாவுக்கு 31-ந் தேதி வரை நீதிமன்ற காவல்

பெண்ணை கடத்தி மிரட்டிய வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த ரவுடி படப்பை குணாவுக்கு 31-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்ணை கடத்தி மிரட்டிய வழக்கில் கோர்ட்டில் சரண்: ரவுடி படப்பை குணாவுக்கு 31-ந் தேதி வரை நீதிமன்ற காவல்
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே உள்ள மதுராமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரூபாவதி. கர்ப்பிணியான இவர், கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் அளித்த புகாரில் சுங்குவார்சத்திரம் போலீசார் நடவடிக்கையால் படப்பை குணா உள்பட அவரது கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் வழக்கில் ஜாமினில் வெளிவந்த படப்பை குணா தன்னை கடத்தி வழக்கை வாபஸ் பெறவேண்டும் என மிரட்டி எழுதி வாங்கியதாக ரூபாவதி கடந்த டிசம்பர் மாதம் சுங்குவாசத்திரம் போலீசில் புகார் செய்தார்.

இதற்கிடையில் ரவுடி படப்பை குணா மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 48 வழக்குகள் உள்ள நிலையில், காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையில் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ரூபாவதியை மிரட்டிய வழக்கில் பிரபல ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைய விரும்புவதாக மனுத்தாக்கல் செய்தார்.

7 நாட்கள் நீதிமன்ற காவல்

இந்த மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு கிருஷ்ணன் முன் வந்ததையடுத்து, ரவுடி படப்பை குணா சரண் அடைந்தார். இதையடுத்து அவரை வருகிற 31-ந் தேதி வரை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து ரவுடி படப்பை குணா பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். போலீஸ் காவலில் எடுத்து அவரை விசாரிக்க காஞ்சீபுரம் மாவட்ட சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com