பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள்; பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் - மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள்; பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் - மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
Published on

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டை நிதிக்குழு தலைவர் எல்.சீனிவாஸ் நேற்று தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

ஏழைகள், வீடு இல்லாதவர்கள் தங்க ரூ.5 கோடியில் இரவில் தங்கும் கட்டிடம் கட்டப்படும். திருநங்கைகளின் திறனை மேம்படுத்தி அவர்களை சுயசார்பு உள்ளவர்களாக மாற்ற ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படும். நலிவடைந்த மக்களுக்கு உதவ அனைத்து வார்டுகளுக்கும் தலா 50 தையல் எந்திரங்களை வழங்க ரூ.4 கோடி ஒதுக்கப்படும்

பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக ரூ.604.12 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் கல்வி திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அதாவது குழந்தைகளின் கற்றல், அறிவாற்றல், மாண்புகள், திறனை மேம்படுத்த ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. நயன தீபம் என்ற திட்டத்தின் கீழ் மாநகராட்சி பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் 150 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம், பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் 100 பேருக்கு தலா ரூ.35 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படும். இதற்காக ரூ.75 லட்சம் ஒதுக்கப்படும்.

மதிய உணவு திட்டம்

பொம்மனஹள்ளி, மகாதேவபுரா, எலகங்கா, தாசரஹள்ளி மண்டலங்களில் நாடபிரபு கெம்பேகவுடா பெயரில் பள்ளி கட்டிடங்கள் கட்ட ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும். பெங்களூரு மாநகராட்சி பள்ளி மற்றும் பி.யூ.கல்லூரிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்த மதிய உணவு திட்டம் இனிமேல் மாநகராட்சி முதல் நிலை கல்லூரி மற்றும் முதுநிலை கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.2.85 கோடி நிதி ஒதுக்கப்படும்.

மாநகராட்சி பள்ளி-கல்லூரிகளில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் நோக்கத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். அப்போது காரம்-இனிப்பு பண்டங்கள் வழங்கப்படும். மாநகராட்சி பள்ளி-கல்லூரிகளில் ரூ.21 கோடியில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மாநகராட்சி பள்ளி-கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க ரூ.75 லட்சம் ஒதுக்கப்படும்.

கண்காணிப்பு கேமராக்கள்

மாணவர்களின் பாதுகாப்புக்காக பள்ளி-கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். மாணவர்களுக்கு மருத்துவ வசதிகள் வழங்க ரூ.1 கோடி வங்கியில் டெபாசிட் செய்யப்படும். அதில் இருந்து கிடைக்கும் வட்டி மருத்துவ வசதிகளுக்கு பயன்படுத்தப்படும். பள்ளி-கல்லூரிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும்.

பள்ளி-கல்லூரிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க ரூ.2 கோடி, பள்ளி-கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு சீருடை திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்படும். பள்ளி-கல்லூரிகளில் கலாசார விழாக்கள் கொண்டாடவும், மாணவர்களிடையே போட்டி மனப்பான்மையை வளர்க்கவும் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படும். மொத்தத்தில் கல்வித்துறையின் மேம்பாட்டிற்கு ரூ.130.60 கோடி நிதி ஒதுக்கப்படும்.

இவ்வாறு எல்.சீனிவாஸ் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com