திருட்டு சம்பவங்களை தடுக்க தென்காசி நகரின் முக்கிய சாலையில் கண்காணிப்பு கேமராக்கள்

தென்காசி நகரில் திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக முக்கிய சாலையில் வரிசையாக கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது என போலீசார்- வியாபாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருட்டு சம்பவங்களை தடுக்க தென்காசி நகரின் முக்கிய சாலையில் கண்காணிப்பு கேமராக்கள்
Published on

தென்காசி,

தென்காசியில் சமீபத்தில் பட்டப்பகலில் ஒரு தொழில் அதிபரின் வீட்டில் 2 மர்ம நபர்கள் புகுந்து தொழில் அதிபரின் மனைவியை செல்லோ டேப் மூலம் கட்டிப்போட்டு அந்த வீட்டில் இருந்த 100 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்று விட்டனர்.

இதன்பிறகு தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத்தில் நாட்டு வைத்தியர் ஒருவரது வீட்டில் 6 பேர் புகுந்து வைத்தியரை கட்டிப்போட்டு அங்கிருந்த 12 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்று விட்டனர்.

போலீஸ் விசாரணை

இந்த இரு சம்பவங்களிலும் செல்லோ டேப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒரே கும்பல் இந்த சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஒரு மோட்டார் சைக்கிளில்

இரண்டு பேர் சென்றது பதிவாகி உள்ளது. அதில் பின்புறம் இருந்த நபர் பர்தா அணிந்து உள்ளார். சம்பவம் நடைபெற்ற இரண்டு வீடுகளிலும் கேமரா பொருத்தப்படவில்லை.

இந்த சம்பவங்களை தொடர்ந்து போலீசார் பல்வேறு இடங்களிலும் கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனாலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

எனவே மேலும் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், அவ்வாறு நடந்தால் உடனடியாக கண்டுபிடிக்கும் வகையிலும் முக்கிய சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

ஆலோசனை கூட்டம்

இதைத்தொடர்ந்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் அங்குள்ள மண்டபத்தில் நேற்று வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் தென்காசி ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து குத்துக்கல்வலசை வரை சாலையின் இருபுறமும் உள்ள வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தென்காசி ரெயில்வே மேம்பாலம் தொடங்கும் இடமான இலஞ்சி விலக்கு சிக்னல் பகுதியில் இருந்து குத்துக்கல்வலசை வரை சாலையின் மையப்பகுதியில் சுமார் 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இப்பகுதி வியாபாரிகள் செய்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com