மாணவர்களை தகாத வார்த்தையால் திட்டிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்

மாணவ-மாணவிகளை தகாத வார்த்தையால் திட்டிய பட்டுகோணாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து வட்டார கல்வி அலுவலர் உமாதேவி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாணவர்களை தகாத வார்த்தையால் திட்டிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பணி இடைநீக்கம்
Published on

பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டுகோணாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக பாபு (வயது 51) என்பவர் இருந்து வருகிறார். இவர் மாணவ-மாணவிகளை தகாத வார்த்தையால் திட்டியும், அடித்தும் வந்துள்ளார். மேலும் அவர் வகுப்பறையில் புகையிலை பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவ-மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகளின் பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தில் தலைமை ஆசிரியர் மீது புகார் செய்தனர். அதன்பேரில் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர் பாபுவை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. ஆனால் தலைமை ஆசிரியர் தொடர்ந்து புகையிலையை பயன்படுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாணவ-மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் பள்ளிக்கு சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தலைமை ஆசிரியர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டார கல்வி அலுவலர் உமாதேவி பட்டுகோணாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்றார். அப்போது புகார் தொடர்பாக விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் பெற்றோர்களிடம் உறுதியளித்தார். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் அவர் மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து அரூர் கல்வி மாவட்ட அலுவலர் குழந்தைவேலு ஆலோசனையின் பேரில் பட்டுகோணாம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாபுவை பணி இடைநீக்கம் செய்து கல்வி அலுவலர் உமாதேவி நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த சம்பவம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com