சிரஞ்சீவி சர்ஜா மரணம் குறித்து சந்தேகம்; இறந்துபோன எனது கணவரை இழிவுபடுத்த வேண்டாம் - நடிகை மேக்னா ராஜ் கண்ணீர்

சிரஞ்சீவி சர்ஜா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய நிலையில், இறந்து போன தனது கணவரின் பெயரை இழிவுபடுத்த வேண்டாம் என்று நடிகை மேக்னா ராஜ் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
சிரஞ்சீவி சர்ஜா மரணம் குறித்து சந்தேகம்; இறந்துபோன எனது கணவரை இழிவுபடுத்த வேண்டாம் - நடிகை மேக்னா ராஜ் கண்ணீர்
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை, போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். அனிகாவிடம் நடத்திய விசாரணையின் போது அவர் கன்னட திரைஉலகினருக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கன்னட திரைஉலகில் போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது என்று கூறிய இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ், சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்த கன்னட இளம்நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம் குறித்து சந்தேகம் எழுப்பினார். சிரஞ்சீவி சர்ஜாவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாதது ஏன்? இந்த விஷயத்தில் அரசியல் நெருக்கடி கொடுக்கப்பட்டதா? என்று அவர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் கூறியதாவது:-

கன்னட திரைஉலகினர் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்களா? என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது கணவர் சிரஞ்சீவி சர்ஜா மரணம் குறித்து இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் சந்தேகம் எழுப்பியுள்ளார். இது எனக்கு வேதனை அளித்து உள்ளது. இறந்து போனவரை பற்றி பேசி அவருக்கு என்ன கிடைக்க போகிறது?. போதை மருந்து விவகாரத்தில் சிரஞ்சீவியின் பெயரை இழுப்பது போல தெரிகிறது. அவர் ஏன் இப்படி பேசுகிறார் என்று தெரியவில்லை. இறந்துபோன எனது கணவரின் பெயரை இழிவுபடுத்த வேண்டாம் என்று கண்ணீர் மல்க கூறினார்.

சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பியும், நடிகருமான துருவ் சர்ஜா கூறும்போது, சிரஞ்சீவி சர்ஜா மரணம் குறித்து இந்திரஜித் லங்கேஷ் சந்தேகம் எழுப்பி இருப்பது எங்கள் குடும்பத்தை பாதித்து உள்ளது. அவர் இறந்து 3 மாதங்கள் ஆகிவிட்டன. குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் இன்னும் சிரஞ்சீவியின் மரணத்தை தாங்க முடியாமல் வேதனையில் உள்ளனர். மேக்னாராஜ் கர்ப்பமாக உள்ளார். இந்த நேரத்தில் அவரது மனதை புண்படுத்தவோ, காயப்படுத்தவோ வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com