சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்திற்கு சுவாமி விவேகானந்தரின் ரதம் வருகை

சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுவாமி விவேகானந்தரின் ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்திற்கு சுவாமி விவேகானந்தரின் ரதம் வருகை
Published on

சேலம்,

சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுவாமி விவேகானந்தரின் ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி காசி ராமகிருஷ்ண மிஷன் சேவாஸ்ரமத்திலிருந்து சேலத்திற்கு சுவாமி விவேகானந்தரின் ரதம் நேற்று இரவு வந்தது. அப்போது அந்த ரதத்திற்கு காசி மற்றும் ஆரத்தி ராமகிருஷ்ண மிஷன் சேவா ஆசிரமத்தின் சுவாமி பிரமதேஷானந்தஜி மகராஜ் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு ஆரத்தியும் நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 8 மணி வரை கோவை ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் சுவாமி ஹரிவிரதானந்தர் கலந்து கொண்டு ஆன்மிக சொற்பொழிவாற்றினார். முன்னதாக கலை நிகழ்ச்சியும், பஜனையும் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு ரத யாத்திரை தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து தியான வடிவில் உள்ள சுவாமி விவேகானந்தரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அவர் சிறப்புரை ஆற்றுகிறார். இதையடுத்து காலை 9.10 மணிக்கு சுவாமி விவேகானந்தரின் ரத யாத்திரை புறப்படுகிறது. இந்த ரதமானது அடுத்த மாதம் 25-ந் தேதி வரை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பவனி வர உள்ளது என்று சேலம் ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் சுவாமி யதாத்மானந்தர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com