

தூத்துக்குடி:
தூத்துக்குடி சுப்பிரமணியசாமி கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நேற்று நடந்தது. குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.
கந்த சஷ்டி விழா
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்தது. விழா நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.
கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்கார நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அப்போது கஜமுகாசூரன், சிங்க முகாசூரன், சூரபத்மன் ஆகியோரை சுவாமி வாதம் செய்தார்.
திருக்கல்யாணம்
தொடர்ந்து நேற்று சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. மாலையில் கோவில் வளாகத்திற்குள் சுவாமி- அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்து. பின்னர் ரத வீதிகளில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்தது.
குறைவான பக்தர்களுக்கு அனுமதி
இந்த நிகழ்ச்சியில் குறைவான பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.