

மேல்மலையனூர்,
மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாத அமாவாசை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி மஞ்சள், குங்குமம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட பலவகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 7 மணியளவில் உற்சவ அம்மன் உட்பிரகாரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினார். பின்னர் பூசாரிகள் பக்தி பாடல்களை பாடியவுடன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி, ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் கோவிந்தராஜி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். கொரோனா தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.