தமிழக டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு நியமனம்; இன்று பதவி ஏற்கிறார்

தமிழக டி.ஜி.பி. திரிபாதி இன்று ஓய்வு பெறும் நிலையில் புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக டி.ஜி.பி.யாக சைலேந்திரபாபு நியமனம்; இன்று பதவி ஏற்கிறார்
Published on

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருப்பவர் திரிபாதி. அவர் இன்று (புதன்கிழமை) ஓய்வு பெறுகிறார்.

புதிய டி.ஜி.பி.

அதையொட்டி தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக டாக்டர் சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு நேற்று பிறப்பித்தது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றபிறகு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் நியமனத்திலும் சரி, ஐ.பி.எஸ்.அதிகாரிகள் நியமனத்திலும் சரி தலைசிறந்த அதிகாரிகளையே தேர்வு செய்து பணி அமர்த்தி உள்ளார். அந்த வகையில் திறமை மிக்க சைலேந்திரபாபுவை தமிழக காவல்துறையில் உயர்ந்த பதவியான டி.ஜி.பி.பதவியில் அமர்த்தி அவர் அழகு பார்த்துள்ளார். அவரது பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். சைலேந்திரபாபு பன்முக திறமை வாய்ந்தவர். தலைசிறந்த தொழில் முறையிலான அதிகாரி ஆவார். சட்டம்-ஒழுங்கை கையாள்வதிலும் சரி, ரவுடிகள் ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக இருந்தாலும் சரி, நிர்வாகம் மற்றும் ஆளுமை திறமையிலும் சரி, போலீஸ், பொதுமக்கள் நலத்தை பேணுவதிலும் சரி அவருக்கு, நிகர் அவரே. நல்ல பேச்சாளர். இன்றைய இளைஞர்களின் வழிகாட்டி. போதிய அதிகாரம் இல்லாத பதவியில் அவர் நியமிக்கப்பட்ட போதும், அவர் துவண்டு போகாமல் அதில் கூட சாதித்து காட்டி உள்ளார். தற்போது அவர் ரெயில்வே டி.ஜி.பி.யாக பதவியில் உள்ளார்.

இன்று பதவி ஏற்கிறார்

இன்று (புதன்கிழமை) பகல் 12 மணி அளவில் சைலேந்திரபாபு தமிழகத்தின் 30-வது டி.ஜி.பி.யாக பதவி ஏற்கிறார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, திரிபாதி விடைபெறுகிறார். இன்று மாலை 4 மணி அளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் திரிபாதிக்கு பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.

சாதனைகள்

புதிய டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்கவிருக்கும் சைலேந்திரபாபு போலீஸ் துறையில் ஆற்றிய சாதனைகள் ஏராளம். தனது 25-வது வயதில் ஐ.பி.எஸ்.அதிகாரியாக தேர்வு பெற்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக தமிழக காவல்துறையில் 1989-ம் ஆண்டு அடி எடுத்து வைத்தார். அதன் பிறகு தர்மபுரி, சேலம் டவுண் ஆகிய பகுதிகளிலும் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக 1992-இல் பொறுப்பு வகித்தார். அப்போது பிரபல ரவுடி வெடிகுண்டு நாகராஜன் என்பவரை நேருக்கு நேர் துணிச்சலாக வீட்டு கதவை உடைத்து சென்று பிடிக்க முற்பட்டார். நாகராஜன் வெடிகுண்டுகளை சைலேந்திரபாபு மீது வீசினார். அதை துணிச்சலாக எதிர்கொண்டு, நாகராஜனை சுட்டு வீழ்த்தினார். செங்கல்பட்டு கிழக்கு, கடலூர், காஞ்சீபுரம் போன்ற மாவட்டங்களில் சூப்பிரண்டாக பணிபுரிந்துள்ளார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த போது, கெண்டகிருஷ்ணய்யா என்ற பிரபல ஆந்திர மாநில கொள்ளையனை அவனது சொந்த கிராமத்துக்கே சென்று அவரை சுட்டுத்தள்ள அதிரடி நடவடிக்கை எடுத்தார். கெண்ட கிருஷ்ணய்யா அவரது காலில் விழுந்து, இனிமேல் தமிழகம் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். பிரபல ரவுடி கேட் ராஜேந்திரனின் கொட்டத்தை அடக்கினார். வடசென்னை இணை கமிஷனராக பணியாற்றிய போது, ரவுடி ஒருவரை என்கவுண்ட்டர் முறையில் சுட்டு தள்ளினார். பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து நிறைய பேர் இறந்த போது, விபத்தில் சிக்கி நடக்க முடியாத நிலையிலும், ஏரி அருகே நாற்காலி போட்டு உட்கார்ந்து மீட்பு பணியை முன்னின்று நடத்தினார்.

போலீஸ் வேலை வாய்ப்பு

இவர் சென்னையில் இணை கமிஷனராக பதவியில் இருந்தபோது, போலீஸ் கு டும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதன் முதலாக வேலை வாய்ப்பு முகாமை நடத்தினார். கோவை போலீஸ் கமிஷனராக பணியாற்றி உள்ளார். அப்போதுதான் சிறுமியை கற்பழித்து கொலை செய்த காமுகனை என்கவுண்ட்டர் முறையில் சுட்டு வீழ்த்தி கோவை மக்களிடம் அசைக்க முடியாத நன்மதிப்பை பெற்றார். போலீஸ் அதிகாரிகளிலேயே பொதுமக்களால் கட்-அவுட் வைத்து வரவேற்பு பெற்றவர் என்று இவரை குறிப்பிடலாம். வடக்கு மண்டல ஐ.ஜி., சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., சிறைத்துறை மற்றும் ரெயில்வே துறையிலும் கூடுதல் டி.ஜி.பி.யாக பணிபுரிந்துள்ளார். எப்.வி.அருள், பி.பி.ரெங்கசாமி, ஸ்ரீபால், வால்டர் தேவாரம், முகர்ஜி போன்ற தலைசிறந்த அதிகாரிகள் அலங்கரித்த பதவி சைலேந்தி ரபாபுவிற்கு கிடைத்துள்ளது, அவரது எண்ணற்ற சாதனை களுக்கு கிடைத்த பரிசு என்று போலீஸ் துறையினர் வரவேற்பு மடல் வாசிக்கிறார்கள்.

குடும்பம்

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யாக பதவி ஏற்கவிருக்கும் டாக்டர் சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் பிறந்தவர். சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை செல்லப்பன். ராணுவத்தில் பணியாற்றி விட்டு, பின்னர் கேரள போக்குவரத்து துறையில் செக்கிங் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவர் மறைந்து விட்டார். இவரது தாயார் ரத்தினம்மாள். தற்போது அவருக்கு 92 வயது ஆகிறது. இந்த வயதிலும் அவர் சொந்த ஊரில் விவசாயம் செய்து, அவரே சமைத்து சாப்பிடுகிறார். இவர் வேளாண்மை பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். சட்டப்படிப்பும் படித்துள்ளார். குற்றவியல் பிரிவில் பி.எச்.டி. முடித்துள்ளார். இவர் பள்ளிப்படிப்பை தனது சொந்த ஊரில் அரசு பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்தார். இவர் முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பின் உதவியோடு பட்டப்படிப்பும், வேளாண்மை பல்கலைக்கழக உதவியோடு பட்டமேல்படிப்பும் முடித்தார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்க பயிற்சி

தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு பட்டப்படிப்பு படித்தபோது, அதே கல்லூரியில்தான் சைலேந்திரபாபு முதுகலை படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கும் இளைஞர்களுக்கு தனது சொந்த முயற்சியில் பயிற்சி கொடுத்து வந்தார். அவரது பயிற்சியின் மூலம் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற 7 பேர் இப்போது கலெக்டர்களாக பணி செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com