கடைகளுக்கு பாத்திரம், துணிப்பை எடுத்து செல்லுங்கள்; கலெக்டர் கதிரவன் அறிவுரை

கடைகளுக்கு பாத்திரம், துணிப்பையை எடுத்து செல்லுங்கள் என்று கலெக்டர் கதிரவன் கூறினார்.
கடைகளுக்கு பாத்திரம், துணிப்பை எடுத்து செல்லுங்கள்; கலெக்டர் கதிரவன் அறிவுரை
Published on

சத்தியமங்கலம்,

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை ஒழிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பஸ் நிலையம் மற்றும் பள்ளிக்கூடங்களில் தின்பண்டங்களை சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் கவர்களை அப்படியே போட்டுவிட்டு செல்கிறார்கள். இவ்வாறு ரோட்டில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை கால்நடைகள் தின்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அவை இறந்துவிட வாய்ப்பு உள்ளது.

இனிமேல் இறைச்சி கடைகள், மளிகை கடைகளுக்கு செல்லும்போது பாத்திரங்கள், துணிப்பைகளை எடுத்து செல்லுங்கள்.

பழமைகளை நாம் மறக்கக்கூடாது. பால், எண்ணெய்களுக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தடுக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இதில் மாணவர்கள் சமுதாயத்துக்கு பெரும் பங்கு உள்ளது. இதை கடமையாக ஏற்று செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த விழாவில் சத்தி காமதேனு கலை அறிவியல் கல்லூரி தலைவர் பெருமாள் சாமி, செயலாளர் மலர், சத்தி ரோட்டரி கிளப் தலைவர் கணேஷ், செயலாளர் முருகேஷ், ரோட்டரி கிளப் இயக்குனர் ஆனைக்கொம்பு ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் கதிரவன் அங்கிருந்து சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே அரியப்பம்பாளையம் ரோட்டில் உள்ள மயானத்துக்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது அரியப்பம்பாளையம் பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் மாணிக்கம் தலைமையில் பொதுமக்கள் அங்கு சென்று, கலெக்டரிடம், இந்த மயானத்தை எங்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்று மனு அளித்தனர். 10 நாட்களுக்கு முன்பு இந்த மயானத்தை சத்தியமங்கலம் நகராட்சி சார்பில் சுத்தப்படுத்தி மக்கும், மக்காத குப்பை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மயானத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். மக்கும், மக்காத குப்பையை தரம் பிரிக்கும் நிலையம் அமைக்கக்கூடாது எனக்கூறி அங்கு வந்த பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து கலெக்டர், சத்தியமங்கலம் பஸ் நிலையம் சென்றார். அங்குள்ள பழக்கடை, ஓட்டல், துணிக்கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என சோதனை செய்தார். மேலும் காமதேனு கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

இந்த ஊர்வலத்தை கலெக்டர் கதிரவன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். எஸ்.ஆர்.டி. கார்னரில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை அடைந்தது.

பின்னர் பண்ணாரி சோதனைச்சாவடி சென்று லாரியால் சேதப்படுத்தப்பட்ட இரும்பு தடுப்பை பார்வையிட்டார். அப்போது அவர் கூறும்போது, பண்ணாரி சோதனைச்சாவடியில் வேகத்தடை அமைக்கப்படும். விரைவில் எடை மேடை கொண்டு வரப்படும். ரோட்டை அகலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மற்றும் வனத்துறையினர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com