பொதுமக்களே கட்டிக்கொடுத்த காவல் உதவி மையம் திறக்கப்படுமா?

கொளப்பாக்கத்தில் பொதுமக்களே கட்டிக்கொடுத்த காவல் உதவி மையம் காட்சி பொருளாக மட்டும் இருந்து வருகிறது. அதனை திறக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக போலீசார் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்களே கட்டிக்கொடுத்த காவல் உதவி மையம் திறக்கப்படுமா?
Published on

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த மாங்காடு அருகே கொளப்பாக்கம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேக்ஸ்வொர்த் நகர் பேஸ் 1, பேஸ் 2, சபாபதி நகர், அண்ணா மெயின்ரோடு உள்ளிட்ட ஏராளமான தெருக்களும், அதில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் என ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.

இந்த பகுதியில் ஒரு அரசு பள்ளி மற்றும் 6 தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. பேரூராட்சிக்கு இணையான வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை கொண்டு செயல்படும் இந்த பகுதி சென்னைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. மேலும் கொளப்பாக்கத்திற்கு அருகிலேயே சென்னை பெருநகர மாநகராட்சி எல்லை தொடங்குகிறது.

இந்த பகுதி முழுவதும் மாங்காடு போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு அதிக அளவில் சங்கிலி பறிப்பு, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் அதனை தடுக்கும் வகையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காவல் உதவி மையம் கட்டி கொடுக்கப்பட்டது.

ஆனால் இதுவரை அந்த காவல் உதவி மையம் திறக்கப்படவில்லை. அந்த கட்டிடம் காட்சி பொருளாக மட்டுமே இருந்து வருகிறது. அதனால் எந்த பயனும் இல்லை. இந்த காவல் உதவி மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் போலீசார் காவல் உதவி மையத்தை திறக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது.

கொளப்பாக்கம் சென்னையின் முக்கிய நுழைவுவாயிலாக அமைந்துள்ளது. மேலும் அதிக குடியிருப்புகள் மிகுந்துள்ளது. சென்னை விமான நிலையத்தின் ஓடுதள பாதை மற்றும் காம்பவுண்ட் சுவரும் இந்த பகுதியில் அமைந்துள்ளது. பல்வேறு இடங்களில் வேலை செய்பவர்களும், சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் இரவு நேரங்களில் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

அவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அவர்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்கள் சங்கிலி பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அது மட்டுமில்லாமல் இந்த பகுதியில் பூட்டிக்கிடக்கும் வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவங்களும் அதிகளவில் நடைபெறுகிறது.

அதற்காக தான் இங்கு நாங்கள் காவல் உதவி மைய கட்டிடத்தை சகல வசதிகளுடன் கட்டி கொடுத்தோம் ஆனால் இதுவரை அந்த கட்டிடத்தை திறந்து போலீசார் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளனர்.

இந்த காவல் உதவி மையம் இயங்கினால் ஓரளவுக்கு குற்ற சம்பவங்களை தடுக்கலாம் ஆனால் இந்த கட்டிடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர போலீசார் ஏன் தயங்குகின்றனர்? என்பது தெரியவில்லை.

ஏற்கனவே மாங்காடு போலீஸ் நிலைய எல்லை பெரிதாக உள்ளது. இதனை இரண்டாக பிரித்து இந்தப்பகுதியில் ஒரு போலீஸ் நிலையம் அமைத்தால் கூட இந்த பகுதி மக்களை திருடர்களிடம் இருந்து பாதுகாக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com