

கடலூர்,
கடலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 71-வது ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பாதிரிக்குப்பத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி கழக செயலாளர் குப்புசாமி, ஒன்றிய துணை செயலாளர் ராதிகா ஜெயபால், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி.சம்பத், தலைமைக் கழக பேச்சாளர் இடிமுரசு. ரவி, கடலூர் நகர செயலாளர் குமரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது:-
அ.தி.மு.க.வை 28 ஆண்டு காலம் ஆட்சி பீடத்தில் அமர்த்தியவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா. அவர்கள் விட்டு சென்ற பணிகளை தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீ ர்செல்வம் ஆகியோர் திறம்பட செய்து வருகின்றனர்.
2019-ம் ஆண்டு முதல்-அமைச்சருக்கும், துணை முதல்-அமைச்சருக்கும் வெற்றி ஆண்டு. இந்த ஆட்சியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கிறோம். தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மாற்றிக் காட்டியவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பிளாஸ்டிக் பொருட்களால் புற்றுநோய் ஏற்படும். இதனால் அதை தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தைரியமான முடிவை அவர் எடுத்துள்ளார். தற்போது இரட்டை சிலை சின்னம் நமக்கு கிடைத்துள்ளது. இதற்கு யார் சொந்தம் கொண்டாடினாலும் எடுபடாது. அதை நாம் மீட்டு விட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் செந்தாமரை, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், மாவட்ட பொருளாளர் ஆர்.வி. ஆறுமுகம், ஒன்றிய பேரவை செயலாளர் கிருஷ்ணசாமி, ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தேவநாதன், நகர அவை தலைவர் ராமச்சந்திரன், நகர துணை செயலாளர் கந்தன், மாவட்ட பிரதிநிதிகள் ஆர்.வி.மணி, வெங்கட்ராமன், முன்னாள் கவுன்சிலர்கள் தமிழ்ச்செல்வன், சுகந்திராஜூ, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை, வார்டு செயலாளர் ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஏழை, எளிய மக்களுக்கு தையல் எந்திரம், சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். முடிவில் கிளை கழக செயலாளர் முருகையன் நன்றி கூறினார்.