தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 1 கோடி பேர் சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடு

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், சூரிய கிரகணத்தை 1 கோடி பேர் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வானவியல் பிரிவு கருத்தாளர் ஜெயமுருகன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 1 கோடி பேர் சூரிய கிரகணத்தை பார்க்க ஏற்பாடு
Published on

கரூர்,

கரூர் மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சூரிய கிரகணத்தை பார்க்கும் வகையில் கண்ணாடிகள் இலவசமாக வினியோகிக்கப்பட்டுள்ளன. அதோடு கரூர் காந்திகிராமம் திடலில் பொதுமக்கள் உள்ளிட்டோர் சூரிய கிரகணத்தை பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சூரியகிரகண நிகழ்வு குறித்து நேற்று கரூர் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினரும், வானவியல் பிரிவு கருத்தாளருமான ஜெயமுருகன் செயல் விளக்கம் அளித்தார். இதில் மாவட்ட செயலாளர் ஜான்பாஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வானவியல் பிரிவு கருத்தாளர் ஜெயமுருகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒளி ஆற்றல், வெப்ப ஆற்றல் உள்ளிட்டவற்றை வெளியிடுகிற ஆற்றல் மூலமாகவே சூரியன் திகழ்கிறது. சூரியனானது பூமியை போல் 13 லட்சம் மடங்கு பெரியதாகும். 15 கோடி கிலோ மீட்டர் தள்ளி இருப்பதால் தான் பூமியிலிருந்து பார்க்கிறபோது சூரியன் சிறிதாக தெரிகிறது. ஆனால் நிலவின் அளவு பூமியிலிருந்து 27 சதவீதம் தான் ஆகும். சூரியன், பூமி, நிலா ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருகிற போது தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் நாளை (வியாழக்கிழமை) நிகழவுள்ள சூரியகிரகணத்தின்போது, 90-92 சதவீதம் வரையில் நிலவானது சூரியனை மறைக்கும். அப்போது வளையம் போல் சூரியன் தெரிவதால் தான் வளையசூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. கரூரில் நாளை காலை 8.05 மணி முதல் 11.16 வரை சூரிய கிரகணத்தை காணலாம். இதனால் யாரும் வெறும் கண்ணால் பார்க்க கூடாது. அதற்கான கண்ணாடியை போட்டு பார்க்க வேண்டும்.

1 கோடி பேர் பார்க்க ஏற்பாடு

கடந்த 2010-ல் ஜனவரி மாதம் 15-ந்தேதி பொங்கல் பண்டிகை அன்று ராமேசுவரம் தனுஷ்கோடி பகுதியில் சூரியகிரகணம் சென்றதை காண முடிந்தது குறிப்பிடத்தக்கது. இனிமேல் 2031-ம் ஆண்டு மே 21-ல் சூரியகிரகணம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை நிகழவுள்ள சூரியகிரகணத்தை கரூர் மாவட்டத்தில் 1 லட்சம் பேர் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 கோடி பேர் சூரியகிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பார்ப்பது என்பது அறிவியல் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வழிவகுக்கும். இதன் காரணமாக விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், வானியல் படிப்பு மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் வெளியிடங்களில் இருந்தும் தமிழகத்திற்கு வருகிறார்கள். எனவே கரூர் மாவட்ட மக்கள், மாணவ, மாணவிகள் இந்த அபூர்வ சூரியகிரகணத்தை காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com