வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை மாற வேண்டும்

வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை மாற வேண்டும் என்று திருப்பூரில் கனிமொழி எம்.பி. கூறினார்.
வெளி மாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை மாற வேண்டும்
Published on

திருப்பூர்,

டெல்லியில் மர்மமான முறையில் இறந்த திருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் வீட்டுக்கு நேற்று மாலை தி.மு.க. எம்.பி. கனிமொழி வந்தார். பின்னர் மாணவர் சரத்பிரபுவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் மாணவரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் இழப்பு, மிகப்பெரிய இழப்பு. அவருடைய குடும்பத்துக்கு மட்டும் இல்லாமல் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கும் நம்பிக்கையாக இருந்த இளைஞர் டெல்லியில் மருத்துவ மேற்படிப்பு படிக்க சென்றபோது இறந்துள்ளார். அந்த குடும்பத்துக்கு மத்திய அரசும், தமிழக அரசும் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

திருப்பூரில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சென்று படித்த மாணவர் சரவணன் மர்ம மரணம் அடைந்தார். அதை தற்கொலை என்று முதலில் சொன்னார்கள். பின்னர் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. தி.மு.க. சார்பில் பாராளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். தற்போது அந்த குடும்பத்தினர் இன்று கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

குற்றம் செய்தவர்கள் யார்? கொலையாளிகள் யார்? என்று இன்று வரை கண்டுபிடிக்க முடியாத நிலை தான் நீடிக்கிறது. சரத்பிரபு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆனால் அவருடைய உடலில் இருக்கும் காயங்கள், நெற்றியில் உள்ள காயம், கழுத்தில் உள்ள காயம் ஆகியவற்றை பார்க்கும்போது நிச்சயமாக அது தற்கொலையாக தோன்றவே இல்லை.

மாணவர் சரத்பிரபுவுக்கு டெல்லியில் என்ன நடந்தது என்று அவருடைய பெற்றோருக்கு உண்மையை தெரிந்துகொள்வதற்கான உரிமையை நாம் கொடுக்க வேண்டும். அது தான் நியாயம். இதற்காக நிச்சயமாக தி.மு.க. பாராளுமன்றத்தில் குரல் எழுப்பும். உரிய நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி சரத்பிரபுவின் பெற்றோருக்கு நியாயம் கிடைப்பதற்கான அனைத்து வழிவகைகளையும் செய்ய வேண்டும்.

வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை மாற வேண்டும். தமிழக மாணவர்கள் எங்கு போய் படித்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை அரசு தர வேண்டும்.

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com