மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடும் பயன்பெறும் - மந்திரி டி.கே.சிவக்குமார்

மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடும் பயன்பெறும் என்று மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாடும் பயன்பெறும் - மந்திரி டி.கே.சிவக்குமார்
Published on

மண்டியா,

மண்டியாவில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மாநில நீர்ப்பாசனத் துறை மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் மேகதாதுவில் அணை கட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இதனால் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்தும் வகையில் மேகதாதுவில் அணை கட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. இந்த அணை திட்டத்தால் வறட்சி காலம் மற்றும் கோடை காலத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் டெல்டா பாசன விவசாயிகளும், தமிழ்நாடும் பயன்பெறும். இந்த திட்டம் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது தொடங்கப்பட்டது. தற்போதைய கூட்டணி ஆட்சியும் மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

மண்டியாவில் ஒரே மாதிரியான பயிர்களை அதிக விவசாயிகள் சாகுபடி செய்கிறார்கள். இதனால் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை ஏற்படுகிறது. எனவே விவசாயிகள் மாற்று பயிர்களை சாகுபடி செய்ய முன்வர வேண்டும். கலப்பட நெல் விதைகளை பயிரிட்டால், அதிக மகசூல் கிடைக்கும். மேலும் தண்ணீரின் பயன்பாடும் குறையும். எனவே இந்த நெல் விதைகளை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com