

காரைக்குடி
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், மழைநீர் சேகரிப்பு, மீன் வளர்ப்பு குளம் ஆகியவை திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா தலைமை தாங்கினார். அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன், கலெக்டர் லதா, காரைக்குடி எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் கலந்துகொண்டு, பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பொருளாதாரம் மற்றும் ஊரக மேம்பாட்டு துறை வகுப்பறை கட்டிடம், உணவகம், பொது அங்காடி கட்டிடம், மழைநீர் சேகரிப்பு மற்றும் மீன் வளர்ப்பு குளத்தை திறந்துவைத்தார்.
பின்னர் துணை வேந்தர் சுப்பையாவுக்கு, பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை வேந்தரை பாராட்டி, அவருக்கு விருதை வழங்கி அமைச்சர் அன்பழகன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்குவதில் சிறப்பு பெற்று வருகிறது. வள்ளல் அழகப்பர் சிறந்த கொடையாளர். பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவி தேசத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியவர் வள்ளல் அழகப்பர். அழகப்பா பல்கலைக்கழகம் கடந்த 3 ஆண்டுகளில் தேசிய அளவில் சாதனைகளை படைத்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த துணை வேந்தர் சுப்பையாவுக்கு பாராட்டு. இப்பல்கலைக்கழகம் தேசிய அளவில் தரவரிசையில் 27-வது இடத்தை பெற்றதற்கும், பல்வேறு தேசிய சாதனைகளை அடைந்ததற்கும் துணை வேந்தரின் கடின உழைப்பும், விடாமுயற்சியுமே காரணம். இந்திய அளவில் தமிழகம் உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது. தற்போது உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கையில் தமிழகம் 46.9 சதவீதமாக உள்ளது.
பின்னர் விழாவில் அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் லதா, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செந்தில்நாதன் எம்.பி., கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. எச்.ராஜா, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் மணிசங்கர், அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கன்னியப்பன், தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் திருமலைச்சாமி, ஆட்சிக்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், ஆட்சிப்பேரவை உறுப்பினர் செந்தில், தனி அலுவலர் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் பாராட்டி பேசினர்.
முன்னதாக தமிழகத்தில் உள்ள 14 பல்கலைக்கழகங்கள், அழகப்பா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்டன. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற உணவு திருவிழாவை அமைச்சர் அன்பழகன் தொடங்கிவைத்தார். மேலும் நிர்வாக கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக முக்கிய வரலாற்று நிகழ்வுகள் அடங்கிய 11 ஒளி பலகைகளை அவர் திறந்துவைத்தார்.