தஞ்சை பெரியகோவிலில் தமிழ்மொழி கல்வெட்டுகள் அகற்றப்பட்டு இந்தி திணிக்கப்படுகிறதா? ஆய்வாளர்கள் அதிர்ச்சி

தஞ்சை பெரியகோவிலில் தமிழ்மொழி கல்வெட்டுகள் அகற்றப்பட்டு இந்தி மொழி கல்வெட்டுகள் பதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவுவதால் ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சை பெரியகோவிலில் தமிழ்மொழி கல்வெட்டுகள் அகற்றப்பட்டு இந்தி திணிக்கப்படுகிறதா? ஆய்வாளர்கள் அதிர்ச்சி
Published on

தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றி கொண்டு இருக்கின்றது. உலக பாரம்பரிய சின்னமாக திகழும் தஞ்சை பெரியகோவில் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது

தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் இங்கு வந்து பெரியகோவிலை பார்வையிட்டு பெரிய கோவிலின் கட்டிட கலை, சிற்பக்கலையை கண்டு வியந்து வருகின்றனர். கோவிலுக்கு வருபவர்கள், கோவில் வளாகத்தில் உள்ள சிற்பங்கள், கல்வெட்டுகள், சாமிகளை செல்போனில் படம் பிடித்து அவற்றை தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இப்படி பதிவுகளை அனுப்பி வைக்கும்போது சிலர் தவறான தகவல்களை அனுப்பி வைத்து விடுகின்றனர். தஞ்சை பெரியகோவிலில் தமிழ்கல்வெட்டுகளை அகற்றி விட்டு இந்திமொழி கல்வெட்டுகள் பதிக்கப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவியது.

இந்த தகவல் பரவியதால் இந்திமொழி பொறிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள இடத்தை பார்ப்பதற்காக வரலாற்று ஆய்வாளர்கள், பொதுமக்கள் நேற்று தஞ்சை பெரிய கோவிலுக்கு திரண்டு வந்தனர்.

அந்த கல்வெட்டை பார்க்கும்போது இந்தி மொழியில் எழுதப்பட்டதைபோல் தான் தெரிகிறது. அது உண்மையில்லை. அவைகள் மராத்திமொழி கல்வெட்டுகள் ஆகும். இந்த கல்வெட்டுகள் பல ஆண்டுகளாக இங்குள்ளது. இந்த கல்வெட்டுகளை கடந்த 1990-ம் ஆண்டே படி எடுத்து அதை புத்தகமாக அச்சிடப்பட்டு, சரசுவதி மகால் நூலகம், தமிழ்ப்பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சுற்று மாளிகையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் அடங்கிய கருங்கல் புதிதாக செய்யப்பட்டதாக இருக்குமோ? என்று சுற்றுலா பயணிகள் சந்தேகப்பட்டனர். ஆனால் அவைகள் அனைத்தும் கோவிலின் வெளிப்புற பாதையை சீரமைத்தபோது பூமிக்கடியில் கண்டெடுக்கப்பட்டவை. அதை பாதுகாப்பாக அறைக்குள் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய தொல்லியல்துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் சங்கர் கூறும்போது, மாமன்னன் ராஜராஜ சோழன் கி.பி.985-ம் ஆண்டு ஆட்சி அரியணையில் ஏறினார். கலை மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு விளங்கியதால் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினார். சேரர்களை ராஜராஜசோழன் வெற்றி பெற்றதன் நினைவாக கேரளாந்தகன் நுழைவு வாயிலை எழுப்பினார். ராஜராஜ சோழன் காலத்தில் கோவில் பணியாளர்கள் விவரம், கொடுக்கப்பட்ட தானங்கள், கோவில் நிர்வாகம், ஆட்சி முறை, பாதுகாப்பு முதலான பல தகவல்கள் கோவில் முழுவதும் கல்வெட்டுகளாக பதிவு செய்யப்பட்டன.

இந்த தகவல்கள் அனைத்தும் தமிழில் நேர்த்தியாக கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. சோழர்களுக்கு பின்னர் தஞ்சையை நாயக்கர்களும், அதைத்தொடர்ந்து மராட்டியர்களும் ஆட்சி புரிந்தனர். மராட்டியர் காலத்தில் கோவிலின் முகப்பு பகுதியில் மராட்டா நுழைவு வாயில் மற்றும் கோவிலின் உள்ளே பல்வேறு கட்டுமானங்களையும் செய்தனர். அப்போது கோவிலின் தென்மேற்கு பகுதியில் உள்ள திருச்சுற்றுமாளிகையின் சுவரில் மராத்தி மொழி எழுத்துக்களை கொண்டு கோவில் திருப்பணிகள் தொடர்பான கல்வெட்டுகளை பொறித்து வைத்துள்ளனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com