

தஞ்சாவூர்,
தஞ்சை பெரியகோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது புராதன சிலைகள் குறித்து 3 மணி நேரம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்றவை. கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது.
இந்த கோவிலுக்கு 66 சிலைகள் நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர தங்கத்தால் ஆன கொள்கைத்தேவர், ஷேத்திரபார் சிலையும், வெள்ளியினால் ஆன 4 வாசுதேவர் சிலைகளும், ராஜராஜ சோழன் தளபதி கிருஷ்ணராமன் கொடுத்த அர்த்தநாரீஸ்வரர் சிலையும் பெரியகோவிலில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்தன.
இந்த சிலைகளில் தங்கத்தினால் ஆன சிலைகள் உள்ளிட்ட பெரும்பாலான சிலைகள் திருடப்பட்டுள்ளன. இதேபோல தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் 2 அடி உயரம் உடைய ஐம்பொன் சிலையும், அவரது பட்டத்தரசியான லோகமாதேவியின் 2 அடிக்கும் குறைவான ஐம்பொன் சிலையும் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானது. இந்த 2 சிலைகளின் மதிப்பும் ரூ.150 கோடி ஆகும்.
இந்த சிலைகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் குஜராத்துக்கு சென்று 2 சிலைகளையும் மீட்டு தஞ்சை பெரியகோவிலுக்கு கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி கொண்டு வந்தனர். பெருவுடையார் சன்னதியில் ராஜராஜசோழன், லோகமாதேவி சிலைகள் வைக்கப்பட்டு சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று காலை முதல் தஞ்சை பெரிய கோவிலுக்கு வர தொடங்கினர். 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 50 போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதியம் 12.30 மணிக்கு பெருவுடையார் சன்னதி நடை அடைக்கப்பட்டது. கோவில் உள்பிரகாரத்தில் ஏராளமான பக்தர்கள் அமர்ந்து இருந்தனர். 1.30 மணி அளவில் கோவில் உள்பிரகாரத்தில் இருந்த பக்தர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன் உள்ளே செல்வதற்கும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பின்னர் ராஜராஜன் கோபுர நுழைவு வாயில் கதவை போலீசார் இழுத்து பூட்டினர்.
2 மணிக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராம், மாதவன் ஆகியோர் பெரியகோவிலுக்கு காரில் வந்தனர். பின்னர் இவர்களுடன் 50 பேர் கொண்ட குழுவினர் பெருவுடையார் சன்னதிக்கு சென்றனர். வழக்கமாக மதியம் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை பெருவுடையார் சன்னதி நடை அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று நடை அடைக்கப்பட்டிருந்தாலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வந்தவுடன் நடை திறக்கப்பட்டு அவர்கள் அனைவரும் பெருவுடையார் சன்னதிக்குள் சென்றவுடன் மீண்டும் நடை சாத்தப்பட்டது.
பின்னர் ராஜராஜன் கோபுர நுழைவு கதவு திறக்கப்பட்டு உள்பிரகாரத்திற்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். சன்னதிக்குள் சென்ற போலீசார் 3 பிரிவுகளாக பிரிந்து, அங்கு அர்த்த மண்டபத்தில் வரிசையாக வைக்கப்பட்டுள்ள சிலைகளை ஆய்வு செய்தனர். புராதன சிலைகள் எத்தனை உள்ளன என்று கணக்கெடுப்பு நடத்தியதுடன், இந்த சிலைகளில் மாறுதல் ஏதும் செய்யப்பட்டிருக்கிறதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.
புராதன சிலைகளில் எழுதப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்கள் பழங்காலத்தில் எழுதப்பட்டதா? தற்போது புதிதாக எழுதப்பட்டிருக்கிறதா? என்றும் சோதனை செய்தனர். பின்னர் நடராஜர் சன்னதிக்கு சென்றும் ஆய்வு மேற்கொண்டனர். இவைகள் எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்ததுடன், வீடியோவிலும் பதிவு செய்தனர். இந்த ஆய்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
பின்னர் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரனை நேரில் வரவழைத்து அவரிடம் சில தகவல்களை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கேட்டறிந்தார். மேலும் அதிகாரிகள் சிலரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.