

தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தை நடத்துவதற்காக அதிகாரிகள் வந்தவுடன், சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்தியஅரசு அமைக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்தியஅரசு அமைக்க தமிழகஅரசு அழுத்தம் கொடுக்க கோரியும் வெளிநடப்பு செய்வதாக கூறி விவசாயிகள் கூட்ட அறையை விட்டு வெளியே சென்றனர். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் விவசாயிகள் கூறும்போது, நடப்பு ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படுவது குறித்து தமிழகஅரசின் நிலைபாட்டை உடனே அறிவிக்க வேண்டும். ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். சம்பா அறுவடை கடந்த பிப்ரவரி மாத இறுதியில் முடிந்திருந்தும் இந்த ஆண்டிற்கான பயிர் இழப்பீடு எவ்வளவு? என்பதை கிராமம் வாரியாக கிராம நிர்வாக அலுவலகங்களில் பட்டியலை ஒட்ட வேண்டும் என்றார்.
பின்னர் அனைவரும் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.