அரசு பள்ளியில் சேர்க்க மாணவர்களுக்கு மாலை அணிவித்து அழைத்து வந்த ஆசிரியர்கள்

அரசு பள்ளியில் சேர மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்து அழைத்து வந்தனர்.
அரசு பள்ளியில் சேர்க்க மாணவர்களுக்கு மாலை அணிவித்து அழைத்து வந்த ஆசிரியர்கள்
Published on

வையம்பட்டி,

மணப்பாறையை அடுத்த வளநாடு அருகே உள்ள ஊனையூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 102 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மற்ற பள்ளிகளுக்கு முன்னுதாரணமாக திகழும் வகையில் இந்த பள்ளியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் மகளிர் தின விழாவில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் மகாராணி போல கவுரவிக்கப்பட்டனர்.

தற்போது, இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பதற்காக அருகில் உள்ள கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பை இந்த ஆண்டு முடிக்கும் மாணவ-மாணவிகளின் பெயரை சேகரித்து அவர்களது வீட்டுக்கே பள்ளியின் தலைமை ஆசிரியர் சற்குணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் நேரில் சென்று மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் அழைப்பிதழுடன் வெற்றிலை, பாக்கு கொடுத்து தங்களின் பிள்ளைகளை 6-ம் வகுப்பில் சேர்க்க வலியுறுத்தினர்.

இதில் சேர விரும்பிய மாணவ-மாணவிகளுக்கு மாலை அணிவித்து அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இருந்து இசைக்கருவிகள் முழங்க ஊர்வலமாக அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். இதற்காக 6-ம் வகுப்பில் சேர உள்ள மாணவ-மாணவிகளின் வகுப்பறைகளும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பள்ளிக்கு புதிதாக சேர உள்ள மாணவ, மாணவிகளை மற்ற மாணவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பள்ளிக்குள் வந்ததும் வகுப்பறையில் அனைவரையும் அமர வைத்தனர். இதில் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சேர்க்கைக்கான முன்னோட்டமாக மாணவ-மாணவிகளின் பெயர்கள் குறித்து வைக்கப்பட்டு கையொப்பம் பெற்றுக் கொள்ளப்பட்டது. இதுமட்டுமின்றி மாணவ-மாணவிகளுக்கும், அவர் களின் பெற்றோர்களுக்கும் இனிப்பு, காரம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com