

தற்கொலை
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் மீசரகண்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர். வினோத் (வயது 30). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நெமிலி தாலுகா புன்னை கிராமத்தை சேர்ந்த முனுசாமி, கல்யாணி தம்பதிகளின் மகள் மீரா (23) என்பவருடன் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனால், இது நாள் வரை இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் மீரா தாய் வீட்டுக்கு சென்றார்.
தனக்கு குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் மன உளைச்சலில் இருந்த மீரா, நேற்று அரளி விதையை அரைத்து குடித்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மீரா பரிதாபமாக இறந்தார்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இதுகுறித்து மீராவின் தாய் கல்யாணி (45) ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் முடிந்து 4 ஆண்டுகளில் மீரா தற்கொலை செய்து கொண்டதால், அவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா விசாரணை நடத்தி வருகிறார்.