கால்நடை விற்பனைக்கு தற்காலிக தடை: உப்பிடமங்கலம் வாரச்சந்தை களை இழந்தது ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு

கால்நடை விற்பனைக்கு தற்காலிக தடை விதித்ததால் உப்பிடமங்கலம் வாரச்சந்தை நேற்று களை இழந்து காணப்பட்டது. இதனால் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கால்நடை விற்பனைக்கு தற்காலிக தடை: உப்பிடமங்கலம் வாரச்சந்தை களை இழந்தது ரூ.1 கோடி வர்த்தகம் பாதிப்பு
Published on

வெள்ளியணை,

தமிழகத்தில் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில், உப்பிடமங்கலம் கால்நடை சந்தையும் ஒன்றாகும். இந்த சந்தையில் வாரநாட்களில் சனிக்கிழமை காலையில் இறைச்சிக்கான மாடுகள், எருமைகள் இவற்றின் கன்றுக்குட்டிகள் விற்பனை அதிக அளவில் நடக்கும். ஞாயிற்றுக்கிழமை காலையில் வளர்ப்பு பசுமாடுகள், எருமை மாடுகள், வண்டி மாடுகள் ஆகியவற்றின் விற்பனை அதிக அளவில் நடக்கும். இவற்றை வாங்க கரூர் மாவட்டம் மட்டுமல்லாது திண்டுக்கல், மதுரை, தேனி, நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளிலிருந்தும் கேரளா,ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகளும், விவசாயிகளும் அதிக அளவில் வருகின்றனர்.

இதேபோல் பல்வேறு பகுதியிலிருந்தும் விவசாயிகளும் ,வியாபாரிகளும் தங்களின் கால்நடைகளை விற்பனை செய்ய இங்கு கொண்டு வருகின்றனர். இதனால் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாளும் உப்பிடமங்கலம் சந்தை மற்றும் கடைவீதி பகுதி ஆட்கள் நடமாட்டத்தால் களைகட்டியிருக்கும். இந்த நிலையில் அண்மையில் பெய்த மழையினாலும், இரவு நேர பனிப்பொழிவினாலும் நாமக்கல் ,சேலம் ,ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் ஏற்பட்டு பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இதனால் மற்ற மாவட்டங்களில் இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க அங்குள்ள கால்நடை சந்தைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதனால் அந்த மாவட்டங்களிலிருந்து நோய் தொற்று உள்ள கால்நடைகள் உப்பிடமங்கலம் சந்தைக்கு விற்பனைக்கு வரக்கூடும். இதனால் கரூர் மாவட்டத்திலும் தீவிரமாக கோமாரி நோய் பரவக்கூடும் என கருதி, மாவட்ட நிர்வாகம் உப்பிடமங்கலம் கால்நடை சந்தைக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. இதனை அறிந்த விவசாயிகளும், வியாபாரிகளும் கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வராததால் வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் சனிக்கிழமையான நேற்று முன்தினமும், ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் சந்தை மற்றும் கடைவீதி பகுதி களை இழந்து காணப்பட்டது. மேலும் கால்நடை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சந்தையின் முன்பு விளம்பர பதாகையும் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கால்நடை வியாபாரிகள் கூறுகையில், இந்த தடையால் உத்தரவால் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் இங்கு நடைபெறும் காய்கறி, தானியங்கள் ,விவசாய பயன்பாட்டு பொருட்கள் ,கத்திரி, தக்காளி நாற்றுக்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான சந்தை நேற்று நடைபெற்றது. இவற்றை வழக்கம்போல் பொதுமக்கள் வந்து வாங்கி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com