

பத்திரப்பதிவுக்கு தடை
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் மத்திய அரசு அணுசக்தி துறையில் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அணு நிறுவனங்கள் மற்றும் கற்றுப்புற கிராம மக்கள் நலன்கருதி இந்த பகுதிகளில் உள்ள 14 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களின் நிலபத்திரங்களை பதிவு செய்ய வேண்டாம் என மாவட்ட பதிவாளருக்கு திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமளா கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அறிவிப்பு ஒட்டப்பட்டது. இதை பாத்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
தற்காலிக ரத்து
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம், துணைத்தலைவர் எஸ்வந்தராவ் ஆகியோர் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து பத்திரப்பதிவு நிறுத்தம் குறித்த அறிவிப்பால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளையும் பாதிப்புகளையும் விளக்கி கூறினர். இதையடுத்து அந்த அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் கல்பாக்கத்தை சுற்றியுள்ள 14 கிராமங்களை சேர்ந்தவர்களும் பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து திருக்கழுக்குன்றம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வழக்கம்போல பத்திரப்பதிவு நடைபெற்றது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.