

ஸ்ரீவைகுண்டம்,
வல்லநாடு அருகே உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தற்காலிக பணியாளர்கள், தங்களை உடனே பணிநிரந்தரம் செய்ய வேண்டும். சம்பள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் வாரத்தில் 5 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதை தொடர்ந்து நேற்று தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தற்காலிக பணியாளர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர்.
நேற்று காலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள், கல்லூரி வளாகத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வேளாண்மை பல்கலைக்கழக பண்ணை தொழிலாளர் சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் பார்வதி, பொருளாளர் வேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இனியும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், வருகிற 5-ந்தேதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம், என தற்காலிக பணியாளர்கள் தெரிவித்தனர்.