

புனே,
புனே பிம்பிரி நேரு நகரை சேர்ந்தவர் ஷியாம் கிசான் (வயது40). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டுக்கு செல்ல அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது வழியில் 2 வாலிபர்களும், 2 சிறுவர்களும் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஷியாம் கிசானை அழைத்து தனக்கு அங்குள்ள கடையில் சிகரெட் வாங்கி தரும்படி மிரட்டினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர், வயதில் மூத்தவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ளும்படி கூறினார். அப்போது திடீரென வாலிபர் ஒருவர், ஷியாம் கிசானின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதனால் கடும் ஆத்திரம் அடைந்த ஷியாம் கிசான் அந்த வாலிபரை பிடித்து கீழே தள்ளினார்.
இதையடுத்து 4 பேரும் சேர்ந்து ஷியாம் கிசானை தாக்க தொடங்கினர். அதில் ஒருவர் ஓடிச்சென்று கத்தியுடன் திரும்பி வந்தார். பின்னர் அவர்கள் ஷியாம் கிசானை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டி தப்பி சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த ஷியாம் கிசான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷியாம் கிசானை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி சென்ற 4 பேரையும் பிடித்தனர். இதில் சிறுவர்கள் 2 பேரும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும், மற்றவர்கள் போசரி பகுதியை சேர்ந்த ஆகாஷ் கரத் (22), விஜய் சாவந்த் (20) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், சிறுவர்கள் 2 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.